ஐகோர்ட் கிளையில் பணியாற்றுபவர்களின் பாலியல் புகார்களை விசாரிக்க சிறப்பு குழு தனி அலுவலகம் திறப்பு

மதுரை, ஜன.23: ஐகோர்ட் கிளையில் பணியாற்றுவோரின் பாலியல் தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கான சிறப்புக் குழுவிற்கான தனி அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.  பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க சிறப்புக்குழு அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளையில் தனித்தனியே குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, ஐகோர்ட் மதுரை கிளையில் பாலின பாகுபாடு மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கான உள்விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதி ஜெ.நிஷாபானு தலைமையில், நீதிபதிகள் ஆர்.தாரணி, டி.கிருஷ்ணவள்ளி, வக்கீல்கள் கார்த்தி, சுரேஷ்குமார் ஐசக்பால், காந்தி, மூத்த வக்கீல் கிருஷ்ணவேணி, சாமித்துரை, ஆனந்தவள்ளி, கூடுதல் பதிவாளர்(ஐ.டி)மீனா, சமூக செயற்பாட்டாளர் கயல்விழி, வக்கீல் கிளார்க் மெர்சி பிரமிளா ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு சிறப்பாக செயல்படுவதற்காக ரூ.30.54 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்கென தனி ஊழியர்களை கொண்ட சிறப்புக் குழுவின் அலுவலகம் ஐகோர்ட் கிளை மூன்றாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை நிர்வாக நீதிபதி எம்.துரைச்சுவாமி நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள் டி.ராஜா உள்ளிட்டோரும் பதிவாளர்களும் கலந்து கொண்டனர். ஐகோர்ட் கிளை வளாகத்திற்குள் பணியில் உள்ள நீதிமன்ற ஊழியர்கள், வக்கீல்கள், சிஐஎஸ்எப் படையினர், போலீசார் உள்ளிட்டோரின் புகார்களை இந்தக் குழு விசாரிக்கும்.

Related Stories: