காட்பாடி அருகே கொல்லப்பள்ளி கிராமத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவவீரர் மனு

வேலூர், ஜன.21: காட்பாடி அருகே கொல்லப்பள்ளி கிராமத்தில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததோடு குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டதாக ஓய்வு பெற்ற ராணுவவீரர் மனைவியுடன் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் நேற்று மனு அளித்தார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ பார்த்தீபன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். காட்பாடி அடுத்த கொல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவவீரர் நரசிம்மன் அளித்த மனுவில், எனக்கு சொந்தமான இடத்தில் தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதை கேட்டால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிட்டதாகவும், கோயிலுக்கு செல்லவும், மற்றவர்களிடம் பேசவும், நிலத்தின் மீது நடக்கவும் தடை விதித்துள்ளதாக மிரட்டுகின்றனர். எனவே இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்தர வேண்டும்’ என்றார்.

Advertising
Advertising

ஊசூர் அடுத்த தெள்ளூர் பலராமன் என்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி அளித்த மனுவில், காட்பாடி அடுத்த அம்முண்டி கிராமத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் பட்டாவுடன் கூடிய வீடுகள் உள்ளது. இதில் வீட்டுடன் கூடிய வீட்டு மனைபட்டா பெற தகுதியுள்ளவர்களின் பட்டியல் 2016ம் ஆண்டு கலெக்டரின் தேர்வு குழுவால் தயாரிக்கப்பட்டது. அதில் எனது பெயர் இருந்தது. ஆனால் எனக்கு வீடு, மனை பட்டா வழங்கவில்லை. எனவே எனக்கு வீடுடன் கூடிய பட்டா வழங்கவேண்டும்’ என்றார். வேலூர் பொதுமக்கள் அளித்த மனுவில்’ ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த வேலப்பாடி ஏரி கடந்த 10 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருந்தது. தற்போது ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் நீச்சல்குளம், பூங்கா உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவேண்டும்’ என்றனர்.

அம்முண்டி அடுத்த சமத்துவபுரத்ைத சேர்ந்த உஷா என்பவர் அளித்த மனுவில், எனக்கு 4 குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவி நான் இருக்கும்போதே, எனது கணவர் 2வது திருமணம் செய்து கொண்டார். இதனால் என் குழந்தைகளை காப்பாற்ற வழியின்றி தவிக்கிறேன். இதுகுறித்து நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்துள்ளேன். நடவடிக்கை எடுக்கவில்லை. காட்பாடி மகளிர் ஸ்டேஷனில் புகார் செய்தேன். அவர்கள் விசாரிக்க செல்ல ஆட்டோ கட்டணம் கேட்கின்றனர். இல்லாவிட்டால் கணவரை நீயே அழைத்து வா என்று கூறுகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

காட்பாடி அடுத்த கல்புதூர் கிராமத்ைத சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் அன்பு மற்றும் ஊர்மக்கள் அளித்த மனுவில், எங்கள் ஊரில் மாடுவிடும் விழா நடத்துவதற்கு உரிய தேதியை ஒதுக்கீடு செய்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஆவின்பெருந்தலைவர் வேலழகன் அளித்த மனுவில், ‘ஒடுக்கத்தூர் அருகே உள்ள உத்திரகாவேரிஆற்றின் இடையே பொதுமக்கள் சென்றுவர வசதியாக மேம்பாலம் அமைக்க நடவடிக்கை வேண்டும்’ என்றார். மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

Related Stories: