வேலூர் புதிய பஸ்நிலையத்தில் ₹46 மதிப்பீட்டில் ஆமைவேகத்தில் ஸ்மார்ட் பஸ்நிலைய பணிகள் மாநகர மக்கள் கடும் அதிருப்தி

வேலூர், டிச.21: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ₹46 கோடியில் அமைக்கப்பட உள்ள ஸ்மார்ட் பஸ் ஸ்டேண்ட் பணிகள் ஆமைவேகத்தில் நடந்து வருவதால் மாநகர மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு ₹1,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் வேலூர் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருகிறது. இதில் பஸ் நிலையம், கோட்டை, ஸ்மார்ட் சாலை, பாதாள சாக்கடை உள்ளிட்ட 72 திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் சிட்டி பணிகளில் பெரிய பணியாக வேலூர் புதிய பஸ் நிலையம் ₹46 கோடியில் ஸ்மார்ட் பஸ் நிலையமாக மாற்றப்பட உள்ளது. இந்த பணிகளுக்கான டெண்டருக்கு விண்ணப்பிக்க கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது ஸ்மார்ட் பஸ் ஸ்டேண்டாக மாற்ற ராணிப்பேட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டது. பணிகள் தொடங்குவதற்கு முன்னதாக பஸ்நிலையத்தில் உள்ள கடைகள் ஏலம் எடுத்தவர்கள் கடந்த 31ம் தேதியுடன் காலி செய்ய கடைக்காரர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதோடு பஸ்நிலையத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்கவும் ₹10 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டது.

Advertising
Advertising

இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட உள்ள ஸ்மார்ட் பஸ் ஸ்டேண்ட் கட்டிட வரைபடம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக பஸ் ஸ்டேண்டில் உள்ள கடைகள் இடித்து அகற்றும் பணிகள் வரும் ஜனவரி 2ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், பஸ்நிலையங்களை இடிக்க ₹10 கோடிக்கு டெண்டர் விட்டு மாதங்கள் முடிந்தும், அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. ஸ்மார்ட் பஸ்நிலைய பணிகள் தொடங்குவதில் மாநகராட்சி அதிகாரிகள் ஆமைவேகத்தில் செயல்படுவதாகவும், புதிய பஸ்நிலையம் இடிக்கப்பட்டால் அங்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு வரவேண்டிய மறைமுக வசூல் கிடைக்காது என்றும், பணிகளை தள்ளிப்போட்டு வருவதாக பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்கின்றனர்.

தனியார் கடைக்காரர்களுக்கு விலைபோனார்களா? வேலூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு தினமும் சுமார் 700 பஸ்கள் வரையில் இயக்கப்படுகிறது. இதனால் புதிய பஸ்நிலையத்தில் சுமார் 50ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வந்து செல்கின்றனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், மாநகராட்சியால் கட்டி வாடகைக்கு விடப்பட்ட கடைகள் போக, ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகளும் உள்ளது. இதனால் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அதிகளவில் வருவாய் கிடைக்கிறது. மேலும் ஓட்டல்கள், டீ கடைகள், திண்பண்டகடைகள் என்று விற்பனை அதிகளவில் நடைபெறும் இடமாக புதிய பஸ்நிலையம் உள்ளதால், பஸ்நிலையத்தை உடனாயாக அகற்றினால் வருவாய் பாதிக்கும் என்பதால், மாநகராட்சி அதிகாரிகள் தனியார் கடைக்காரர்களுக்கு விலைபோய்விட்டனர். இதனால் தான் ஜனவரி 1ம் தேதி கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கும் என்றனர். பின்னர் பொங்கல் முடிந்தவுடன் பணிகள் தொடங்கும் என்றனர். ஆனாலும் பெரியளவில் எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்கின்றனர். வேலூர் மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘வேலூர் புதிய பஸ்நிலையத்திற்கு மாற்றாக புதிய பஸ்நிலையத்தின் ஒரு பகுதியில் செல்லியம்மன் கோயில் பின்புறம் சென்னை, திருப்பத்தூர் செல்லும் பஸ்கள் மட்டும் இயக்கும் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்படும். இதற்காக நாளை(இன்று) தார்சாலை அமைக்கப்பட உள்ளது.

இந்த பணிகள் இம்மாதம் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் தான் கட்டிடங்கள் இடிக்கும் பணிகள் தொடங்கும். அதோடு சென்னை, திருப்பத்தூர் தவிர்த்து மற்ற பஸ்கள் அனைத்தும் வேலூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து இயக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பஸ்நிலைய மாற்றங்கள் செய்வதற்கான தேதி குறித்து கலெக்டர் அறிவிப்பார்.’ என்றார். வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘பொங்கல் பண்டிகையால் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கும் பணிகள் தள்ளிபோடப்பட்டது. மாநகராட்சி சார்பில் தற்காலிக பஸ்நிலையத்திற்கு சாலை அமைத்து, எவ்வளவு இடம் தற்காலி பஸ்நிலையத்திற்கு ஒதுக்குகிறார்கள் என்பதை பொருத்து தான், எந்தெந்த பஸ்கள் புதிய பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரியும்’ என்றார்.

Related Stories: