திருப்போரூர் பேரூராட்சியில் அவலம் குழாய்களை பராமரிக்காததால் சாலையில் ஓடும் குடிநீர்: நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்

திருப்போரூர், ஜன.21: திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம், குடிநீர் குழாய்களை முறையாக பராமரிக்காததால் குடிநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதுபற்றி பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். செம்பாக்கம், கொண்டங்கி, சிறுதாவூர் ஆகிய இடங்களில் இருந்து கிணறுகள் தோண்டி, அங்கிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, திருப்போரூர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சேமிக்கப்படுகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் குடிநீர் 3 நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கும், பொது குழாய்கள் மூலமும் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் சப்ளை பணியை கண்காணிக்கவும், பராமரிக்கவும் சுமார் 15க்கும் மேற்பட்ட குடிநீர் பணியாளர்கள் பேரூராட்சியில் வேலை செய்கின்றனர்.

தற்போது நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் அதிக வாகனப் போக்குவரத்து ஆகியவற்றின் காரணமாகவும், அரசியல் கட்சியினரும், திருமணங்களை நடத்துபவர்களும் பேரூராட்சியின் அனுமதியின்றி சாலையில் பள்ளம் தோண்டி பல வண்ண கொடிகளை பறக்க விட கம்பங்களை புதைப்பதாலும் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து சேதமாகின்றன. இதையொட்டி குடிநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடமும், குடிநீர் பணியாளர்களிடமும் பலமுறை புகார் தெரிவித்தும், அவர்களின் அலட்சியப்போக்கால் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகள் சீரமைக்கவில்லை. இதனால் குடிநீர் வீணாவதோடு, அந்த பகுதியில் குட்டை போல் தண்ணீர் தேங்கி, அதில் புழுக்கள் உற்பத்தியாகி மீண்டும் அவை குடிநீர் குழாய்களுக்குள் செல்கின்றன. இதனால் தொற்று நோய் உருவாகி பொது மக்களுக்கு காய்ச்சல், சளி உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பேரூராட்சியின் பல இடங்களில் குடிநீர் குழாய்களை புதிதாக மாற்றி முறையாக பராமரிக்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் பணியாளர்களை நியமித்து தண்ணீரை சேமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: