முள்ளக்காடு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அகற்றப்படாத குப்பையால் சுகாதார சீர்கேடு

ஸ்பிக்நகர், ஜன.21: முள்ளக்காடு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அகற்றப்படாத குப்பைகளால் தூர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் உள்ளனர். தூத்துக்குடி முள்ளக்காடு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே குப்பை குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் கொட்டப்படுகிறது. இவ்வாறு பல நாட்களாக சேகரிக்கப்பட்ட குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து காணப்படுகிறது.குவிந்து கிடக்கும் குப்பைகளில் இருந்து தூர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் குப்பைகளில் உள்ள காய்கறி கழிவுகளை கால்நடைகள் கிளறிச்செல்வதால் அப்பகுதியில் சுகாதார கேடு நிலவுகிறது. மேலும் அதில் உருவாகும் பல்லாயிரக்கணக்கான கொசுக்களால் அப்பகுதி மக்கள் இரவில் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் குப்பை மேடாகமாறியுள்ள அப்பகுதியை கடந்து செல்வோர் மூக்கை பொத்தியபடி செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழியாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.

எனவே, இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு பல நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: