பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம், ஜன.20: சேலம் மாவட்ட விவசாயிகள் நடப்பாண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிக்க வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சேலம் வேளாண்மை இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேலம் மாவட்டத்தில் உள்ள 20 வட்டாரங்களிலும், நடப்பாண்டில் ரபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம், அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடட் என்ற முகமை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் விதைப்பு செய்ய இயலாமை, விதைப்பு தோல்வியுறுதல், மகசூல் இழப்பு மற்றும் வறட்சியினால் இடைக்கால துன்பம் ஏற்படுதல் ஆகிய இனங்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்ட அலகு அடிப்படையில் விவசாயிகள் காப்பீடு பெற தகுதியுடைவர்கள். உள்ளூர் இடர்பாடுகள் மற்றும் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு ஆகிய இனங்களுக்கு, தனிநபர் காப்பீடு பெற தகுதியுடையவர். உள்ளூர் இடர்பாடுகள் இனத்தில் பயிர் மூழ்குதல் ஆபத்து போன்றவை நெல் மற்றும் கரும்புக்கு பொருந்தாது.

தற்போது பயிர் காப்பீடு செய்ய நிலக்கடலைக்கு ஜனவரி 20ம் தேதி, நெல், மக்காசோளத்திற்கு பிப்ரவரி 15ம் தேதி, வெண்டை, வெங்காயத்திற்கு பிப்ரவரி 15ம் தேதி, வாழை, மரவள்ளி, தக்காளிக்கு பிப்ரவரி 28ம் தேதி, எள்ளுக்கு பிப்ரவரி 29ம் தேதி, பருத்திக்கு மார்ச் 31ம் தேி மற்றும் கரும்புக்கு அக்டோபர் 31ம் தேதி கடைசி நாளாகும். விவசாயிகள் ஏக்கருக்கு நிலக்கடலை ₹372, நெல் ₹470, மக்காசோளம் ₹380, எள் ₹168, பருத்தி ₹1,920, கரும்பு ₹2,875, வெண்டை ₹1,060, வெங்காயம் ₹1,740, வாழை ₹3,135, மரவள்ளி ₹1,755 மற்றும் தக்காளி ₹1,850 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு படிவம், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: