ராஜபாளையம் கண்மாய்களில் மீண்டும் ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள் முழுமையாக அகற்றுவது எப்போது?

ராஜபாளையம், ஜன. 19: ராஜபாளையத்தில் கண்மாய்களில் ஆகாயத்தாமரை அகற்றும் அரைகுறையாக நடந்துள்ள நிலையில் முழுமையாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையத்தில் உள்ள பிரண்டை குளம், புளியங்குளம், புதியாதிகுளம், கருங்குளம் ஆகிய கண்மாய்கள் விவசாய பாசனத்துக்கு பயன்பட்டு வருகிறது. சமீபத்தில் பெய்த மழையால், கடந்த 3 ஆண்டுகளுக்கு பின், இக்கண்மாய்கள் நிரம்பின. ஆனால், கண்மாய்கள் முழுவதும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து, விவசாயத்துக்கு தண்ணீரை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து கடந்த டிச.19ல் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் உதவியுடன் ஜேசிபி மூலம் பிரண்டைக் குளம் கண்மாயில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 40 சதவிகிதம் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது ‘ஆம்பல்’ என சங்க காலத்தில் குறிப்பிடப்படும் ‘அல்லி மலர்கள்’ ஆயிரக்கணக்கில் வளர்ந்துள்ளன. தண்ணீர் முழுவதும் விஷச்செடி பரவியிருந்த நிலையில், தற்போது மருத்துவக் குணம் கொண்ட அல்லி மலர்களை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். எனவே, கண்மாய்களில் ஆகாயத்தாமரை  செடிகளை முழுமையாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: