பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை மலையில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த 7 அரசு கட்டிடங்கள் மீட்பு

அணைக்கட்டு, ஜன.12: பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை மலையில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த 7 அரசு கட்டிடங்களை அதிகாரிகள் மீட்டனர்.அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை ஆகிய மூன்று மலைப்பகுதியில் உள்ளன. இந்த ஊராட்சிகளில் குழந்தைகள் அடிப்படை கல்வி கற்க மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அரசு சார்பில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில், பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை ஆகிய 2 ஊராட்சிகளில் அங்கன்வாடி மையங்கள், மகளிர் சுய உதவி குழு கட்டிடங்கள், உரக்கிடங்குகள், தானிய கிடங்குகள், நூலங்கள், டி.வி. அறைகள் உள்ளிட்ட கட்டிடங்களை அப்பகுதியை சேர்ந்த சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வீடாகவும், ஆடு, மாடுகளை கட்டி வைக்கும் இடமாவும் பயன்படுத்தி வந்தனர்.

இதுகுறித்து கடந்த 8ம் தேதி பலாம்பட்டில் நடந்த மனுநீதி நாள் முகாமில் பங்கேற்ற கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, நேற்று தாசில்தார் முரளிகுமார், பிடிஓக்கள், இமயவரம்பன், வின்சென்ட் ரமேஷ்பாபு, ஊராட்சி செயலாளர்கள் நிவாஸ், ரவி ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன், 2 ஊராட்சிகளிலும் ஆக்கிரமிப்பு அரசு கட்டிடங்களை மீட்க மலை கிராமத்திற்கு சென்றனர். தொடர்ந்து, அரசு கட்டிடங்களில் இருந்தவர்களை போலீஸ் பாதுகாப்புடன் வெளியேற்றி, அங்கிருந்த பொருட்களை அகற்றினர்.அதன்படி, 2 அங்கன்வாடி மையங்கள், மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், நூலகம், தானியகிடங்கு, உரக்கிடங்கு, டிவி அறை உள்ளிட்ட 7 கட்டிடங்களை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். மேலும், தானிய கிடங்கை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.தொடர்ந்து, மீண்டும் இதுபோல் ஆக்கிரமிக்க முயன்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரைக்கப்படும் என எச்சரித்தனர்.

Related Stories: