மாநில ஆக்கி போட்டி அரசு பள்ளி அணி சாம்பியன்

வாடிப்பட்டி, ஜன.9: வாடிப்பட்டியில் நடைபெற்ற மாநில அளவில் பள்ளிகளுக்கிடையேயான மகளிர் ஆக்கி போட்டியில் ஈரோடு அரசு மேல்நிலை பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது. வாடிப்பட்டியில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பாக பள்ளிகளுக்கிடையிலான 62வது குடியரசு தின விழா மாநில ஆக்கி போட்டிகள் நடந்தது. இதில் பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி, தாய்மெட்ரிக் பள்ளி மற்றும் திருமங்கலம் பி.கே.என்.மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் கடந்த 5ம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட 32 மாவட்டங்களிலிருந்து அரசு பள்ளி மற்றும் விளையாட்டு விடுதி அணிகளும் பங்கேற்றன.

இதில் முதல்கட்டமாக 17வயது மகளிர் பிரிவிற்கு நடந்த விளையாட்டு போட்டியில் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி, புதுக்கோட்டை விளையாட்டு விடுதி அணியை 3க்கு 1 என்ற கோல்கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. இதன் பரிசளிப்பு விழாவிற்கு தாய்மெட்ரிக் பள்ளி தாளாளர் காந்தி தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜதிலகம் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மதுரை மாவட்ட ஆக்கி சங்க துணைத் தலைவர் கண்ணன் பரிசு கோப்பை மற்றும் ரொக்க பரிசுகளை வழங்கினார். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.

Related Stories: