சரி செய்ய கோரிக்கை சம்ஹார சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் கிராமப்புற, நகர்புற பள்ளி மாணவர்களுக்கான களப்பணி முகாம்

நாகை, ஜன.9: ஒருங்கிணைந்த சம்ஹார சிக்ஷா அபியான் திட்டத்தின்படி பள்ளி மாணவர்களுக்கான பரிமாற்றம் திட்டத்தின்கீழ் நாகையில் களப்பணி முகாம் நேற்று நடந்தது. ஒருங்கிணைந்த சம்ஹார சிக்ஷா அபியான் திட்டத்தின்படி கிராமப்புறங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் நகர பகுதிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுடன் இணைந்து களப்பணியில் பல நிகழ்வுகளை கற்றுக்கொள்வது ஆகும். இதன்படி நாகை அருகே குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் நாகை கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து நேற்று நாகை ரயில்வே ஸ்டேசன் வந்தனர். அங்கு திருச்சியில் இருந்து நாகை வந்த ரயிலில் ஏறி ரயில் எவ்வாறு இயக்கப்படுகிறது. ரயில்வே ஸ்டேஷன்களுக்கு சிக்னல்கள் எவ்வாறு கிடைக்கிறது. தண்டவாளம் எவ்வாறு மாற்றம் செய்யப்படுகிறது என்பது குறித்து முழுமையாக தெரிந்து கொண்டனர். இதன் பின்னர் வங்கியின் செயல்பாடுகள், தபால் நிலையங்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை நேரடியாக பார்த்து தெரிந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து நாகை துறைமுகம் சென்று அங்கு கப்பல்கள் கட்டும் பணி, மீன்பிடி இறங்குதளம் ஆகியவற்றை பார்த்து கப்பல்களின் செயல்பாடு குறித்து தெரிந்து கொண்டனர். தொடர்ந்து நாகையில் உள்ள கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம் என அனைத்து இடத்திற்கும் சென்றனர். இறுதியாக கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று அங்கு செயல்படும் ஸ்மார்ட் வகுப்பு மூலம் கல்வி கற்றனர். அதனைத்தொடர்ந்து இரண்டு பள்ளி மாணவ, மாணவிகளும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலா, குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி, பட்டதாரி ஆசிரியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

Related Stories: