மாநில அளவிலான கபடி போட்டி திருவாரூர் அணிக்கு வீரர்கள் தேர்வு

மன்னார்குடி, ஜன. 8: தமிழ்நாடு மாநில 31வது சப்ஜூனியர் சிறுவர்கள் கபடி சாம்பியன் பட்ட போட்டிகள் கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழக விளையாட்டரங்கில் ஜனவரி 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. அது போல் தமிழ்நாடு மாநில 67வது சீனியர் ஆண்கள் கபடி சாம்பியன் பட்ட போட்டிகள் கரூர் மாவட்டம் புகளூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஜனவரி 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேற்கண்ட சாம்பியன் பட்ட போட்டிகளில் திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்க உள்ள திருவாரூர் மாவட்ட அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் போட்டிகள் வடுவூர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் சப் ஜூனியர் பிரிவில் 50 பேரும், சீனியர் பிரிவில் 30 பேரும் பங்கேற்றனர். இவர்களுக்கு பல்வேறு தகுதி சுற்று போட்டிகள் நடத்தப்பட்டன.அதிலிருந்து சப் ஜூனியர் அணிக்கு 12 வீரர்களையும், சீனியர் அணிக்கு 12 வீரர்களையும் வடுவூர் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சேகர், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் கபடி வீரர் சுப்பிரமணியன், அமைச்சூர் கபடி கழக நிர்வாகிகள் வேலுமணி, கட்டக்குடி அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் உதயகுமார் உள்ளிட்ட தேர்வுக்குழுவினர் வீரர்களை தேர்வு செய்தனர்.

பின்னர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சூர் கபடி கழக துணைத்தலைவர் பந்தல் பொன் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்ற வீரர்களை வாழ்த்தி மாவட்ட அமைச் சூர் கபடி கழக செயலாளர் ராஜ ராஜேந்திரன், வடுவூர் விளையாட்டு அகாடமி செயலாளர் அக்ரி சாமிநாதன், ஊராட்சிமன்ற தலைவர் பாலசுந்தரம் ஆகியோர் பேசினர்.முன்னதாக உதவி தலைமையாசிரியர் மதிவண்ணன் வரவேற்றார். முடிவில் செல்வ இளங்கோவன் நன்றி கூறினார்.

Related Stories: