சிவகங்கையில் களைகட்டும் பான் மசாலா விற்பனை கண்டுகொள்ளாத அலுவலர்கள்

சிவகங்கை, ஜன. 8:  சிவகங்கை நகர் பகுதியில் பான்மசாலா, குட்கா விற்பனையை அலுவலர்கள் கண்டுகொள்ளாததால் தொடர்ந்து விற்பனை நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. புகையிலை, குட்கா, பான்மசாலா போன்றவை விற்பனை செய்ய அரசு தமிழக தடை விதித்துள்ளது. இந்த தடையால் இப்பொருட்களை கடைக்காரர்கள் மறைத்து வைத்து விற்பனை செய்ய தொடங்கினர். சிவகங்கையில் எப்போதாவது கடைகளில் சோதனையிட்டாலும் தொடர்ந்து எவ்வித தடையுமின்றி இப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு வெளிமாநிலத்தவர் தங்கி கட்டிட வேலைகள் செய்து வருகின்றனர். இவர்கள் மற்றும் சிவகங்கையை சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரியில் படிக்கும் வெளிமாநிலத்தவர்,  மாணவர்களை குறிவைத்தே இப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளுக்கு முன்பு பான் மசாலா, புகையிலை நிறுவனத்தின் பெயருடன் வந்து பொருட்களை இறக்கி செல்லும் வேன்கள் தற்போது பெயரில்லாத வேன்களில் வந்து மொத்தமாக இறக்கி செல்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, ‘இளைஞர்களே இப்பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். அரசு தடை விதித்தும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

 சிவகங்கையில் முன்பு நியாயமான விலையில் விற்ற இப்பொருட்கள் அரசு தடையால் தற்போது பல மடங்கு கூடுதல் விலை வைத்து விற்கப்படுகிறது. எப்படியாவது பொருட்கள் கிடைத்தால் போதும் என்ற நிலையில் எந்த விலை கொடுத்தும் வாங்கி செல்கின்றனர். கூடுதல் விலை கொடுத்து நோயை வாங்கும் நிலை உள்ளது’ என்றனர்.

Related Stories: