பார்வையாளர்களுக்கான வசதி குறித்து வண்டலூர் பூங்காவில் கலெக்டர் ஆய்வு

தாம்பரம், ஜன. 8: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களுக்கு செய்யப்படும் வசதிகள் குறித்து செங்கல்பட்டு கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. சுமார் 1490 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா தெற்கு ஆசியாவிலேயே  மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து பூங்காவை சுற்றிப் பார்த்து செல்கின்றனர். குறிப்பாக பொங்கல், தீபாவளி உள்பட பல்வேறு விடுமுறை நாட்களில் இங்கு வழக்கத்தைவிட அதிகமான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து செல்வார்கள்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் விடுமுறை என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இதையாட்டி,  பூங்காவில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனை, செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கூடுதல் அனுமதி சீட்டு வழங்குவதற்கான ஏற்பாடுகள், பெரிய அளவிலான வாகனங்கள் நிறுத்துமிடம், ஓய்விடம் உள்பட பல்வேறு ஏற்பாடு பணிகளை பார்வையிட்டார். பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உயிரியல் பூங்கா அதிகாரி சுதாவிடம், கேட்டறிந்தார். தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தும் இடத்தை ஆய்வு செய்தார்.

Related Stories: