கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட மகாதேவர் சிலை விளக்கேற்றி பக்தர்கள் வரவேற்பு

மார்த்தாண்டம், ஜன.8:  மார்த்தாண்டம் திக்குறிச்சியில் கொள்ளை கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட மகாதேவர் சிலை கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பக்தர்கள் வழிநெடுகிலும் விளக்கேற்றி வரவேற்பு அளித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க 12 சிவாலயங்களில் 2வது சிவாலயம் திக்குறிச்சி மஹாதேவர் ஆலயம். கடந்த  2018 ஆகஸ்ட் 31ம் தேதி கோயிலின் கருவறை பூட்டை உடைத்து மஹாதேவரின் உற்சவ மூர்த்தி சிலை, திருமுகம், திருவாச்சி உள்பட காணிக்கை பணம் ஆகியவற்றை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சரியான ஆதாரங்கள் எதுவும் சிக்காததால் விசாரணையில்  சுணக்கம் ஏற்பட்டது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தி கொள்ளை கும்பலை கண்டுபிடிக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து மீண்டும் விசாரணை தீவிரம் அடைந்தது. அதன் பலனாக 16 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் 3ம் தேதி தனிப்படை உதவி ஆய்வாளர் விஜயன் தலைமையிலான போலீசார் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் உள்பட 4 கொள்ளையர்களை கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து சிலையை அதிரடியாக மீட்டனர். அதன் பிறகு அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலும் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் ஏசுதாஸ், வேறு ஒரு வழக்கில் சிறையில் இருந்து வந்தான். அவனை சிறையில் இருந்து கஸ்டடியில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே காவல் நிலையத்தில் இருந்த மஹாதேவர் சிலை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பிறகு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து மஹாதேவர் சிலை நீதிமன்றத்தில் இருந்து ஊர்வலமாக மேள தாளம் முழங்க தாலபொலி வரவேற்புடன் பக்தர்கள் அணிவகுப்புடன் கோயிலுக்கு பல்லக்கில் எடுத்து செல்லப்பட்டது. மார்த்தாண்டம், இசக்கியார் குளம், உண்ணாமலை கடை, பயணம் வழியாக கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது சாலையின் இரு புறங்களிலும் பக்தர்கள் விளக்கேற்றி வரவேற்பு அளித்தனர். ஊர்வலம் கோயிலை சென்றதும் சுத்திகலசம் செய்யபட்டது. நிகழ்ச்சியில் திருக்கோயில் செயல் அலுவலர் அஜித் குமார், இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசாசோமன், மாநில துணை தலைவர் குழிச்சல் செல்லன், உண்ணாமலைகடை பேருராட்சி முன்னாள்  தலைவர் ஜெயசீலன் உள்பட  ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Related Stories: