நாகை மாவட்டத்தில் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

நாகை, ஜன.7: மார்கழி மாதம் வளர்பிறையில் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்படுவது வழக்கம். இந்தநிலையில் 108 வைணவ தலங்களில் 19 வது திவ்ய தேசமான நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் நேற்று அதி காலை 5.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக சவுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாரதணை காண்பிக்கப்பட்டது. இதில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல வெளிப்பாளையம் வரதராஜபெருமாள் கோயில், நாகை அருகே ஆபரணதாரணி பெருமாள் கோயில், நாகூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், திருக்கண்ணப்புரம் கோயில், அந்தனப்பேட்டை கஸ்தூரி ரங்கநாத பெருமாள் கோயில் உள்ளிட்ட நாகையில் உள்ள பல்வேறு வைணவ கோயில்களில் சிறப்பு வழிபாடும் மற்றும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது.

சீர்காழி:

சீர்காழி தாடளான்கோயிலில் 108 வைணவ தலங்களில் ஒன்றாக அமைந்துள்ள திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது பெருமாள் லோகநாயகி ஆண்டாள் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் சொர்க்க வாசலில் இருந்து எழுந்தருளி வீதி உலா வந்தார். அப்போது பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தனர். பின்பு பெருமாள் தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து திருப்பாத தரிசனம் நடைபெற்றது.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே திருவிழந்தூரில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய பரிமளரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 27ம் தேதி பகல்பத்து உற்சவம் தொடங்கியது. நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 5 மணியளவில் பரிமளரங்கநாதர் ரத்தினஅங்கி சேவையுடன் சிறப்பு அலங்காரத்தில் பரமபதவாசல் (சொர்க்கவாசல்) வழியாக எழுந்தருளினார். மூலவர் முத்தங்கி சேவையில் அருள்பாலித்தார். நேற்று முதல் ராபத்து உற்சவம் தொடங்கியது. வைகுண்ட ஏகாதசியையொட்டி அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், கோயில் செயல்அலுவலர் திருநாவுக்கரசு உட்பட திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

Related Stories: