திருச்செங்கோடு அருகே ஜல்லி கிரசர் ஆலைகளுக்கு தடை கோரி ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு, ஜன.7: திருச்செங்கோடு அருகே எளையாம்பாளையம் புதூரில் ஜல்லி கிரசர் ஆலைகளுக்கு தடை விதிக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு சென்று மனு அளித்தனர். திருச்செங்கோடு தாலுகா எலச்சிப்பாளையம் கோக்கலை எளையாம்பாளையம் புதூரில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியை சுற்றிலும் 5 கல் குவாரிகள், ஜல்லி கிரசர்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், 24 மணி நேரமும் லாரிகள் வந்து செல்வதால் அப்பகுதியில் உள்ள சாலைகள் குண்டும்- குழியுமாக மாறி உள்ளது. மேலும், ஜல்லி கிரசர்களில் இருந்து அதிகளவில் வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசு அபாயம் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

காற்றில் மாசு கலப்பால் சுவாச கோளாறு உள்ளிட்ட உடல்நல பாதிப்பால் அவதிக்குள்ளாகி வந்தனர். எனவே, ஜல்லி கிரசர்களுக்கு தடை விதிக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைதொடர்ந்து, கிராம மக்கள் ஒன்று கூடி ஆலோசித்தனர். இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திடில் பிரச்னைக்கு தீர்வு காண கலெக்டரிடம் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.  அதன்படி, நேற்று காலை அங்குள்ள கோயில் அருகில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கிரசர்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக திரண்டு சென்றனர்.

ஜல்லி கிரசர் ஆலைகளுக்கு தடை விதிக்க கோரி கிராம மக்கள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: