ஆர்டிஓவால் பிடிக்கப்பட்ட 9 மணல் திருடிய லாரிகள் இயந்திரம் திருட்டு வாகனங்களின் நம்பர்களை தவறாக கொடுத்த வருவாய்த்துறையினர்

கும்பகோணம், டிச. 30: கும்பகோணம் அடுத்த சுந்தரபெருமாள்கோயில் அரசலாற்றின் கரையில் அனுமதியின்றி மணல் அள்ளி வருவதாக ஆர்டிஓ விராச்சாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த 18ம் தேதி நள்ளிரவு ஆர்டிஓ வீராச்சாமி மற்றும் வருவாய்த்துறையினர் சுந்தரபெருமாள்கோயில் அரசலாற்று பகுதிக்கு சென்றனர். அப்போது அரசலாற்றில் இருந்த ராட்ஷத இயந்திரம் மூலம் மணலை எடுத்து வந்து கரையில் கொட்டி லாரிகள் மூலம் அனுப்பி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆர்டிஓ வீராச்சாமி மற்றும் அலுவலர்கள் அப்பகுதிக்கு சென்று மணல் அள்ளும் பொக்லைன் இயந்திரம் மற்றும் 9 லாரிகளை பிடித்தனர். இதுகுறித்து சுவாமிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 19ம் தேதி வருவாய்த்துறையினர், அப்பகுதியில் பிடிக்கப்பட்ட லாரிகளை பாதுகாத்து வந்தனர். அப்போது வருவாய் உதவியாளர் கலியமூர்த்தியிடம இருந்த செல்போனை பறித்து தூக்கி எறிந்துவிட்டு லாரிகளை மர்மநபர்கள் எடுத்து சென்றனர்.

இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தில் வருவாய்த்துறையினர் புகார் செய்தனர். அதில் 9 லாரிகள், மணல் அள்ளும் இயந்திரத்தை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர் என்றனர். மேலும் 9 லாரிகளின் நம்பரையும் தெரிவித்தனர். இந்நிலையில் புகாரில் தந்த லாரியின் நம்பர்களை மாற்றி கொடுத்ததால் காவல் நிலையத்தில் எழுதி கொடுத்த நம்பருக்குரிய லாரியின் உரிமையாளர்கள், எங்களுடைய லாரிகள் இல்லையென போலீசாரிடம் கூறி விட்டு சென்றதாக தெரிகிறது. இந்த விஷயத்தில் பல லட்சம் ரூபாய் கைமாறியுள்ளதால் வருவாய்த்துறை உயரதிகாரி ஒருவர் விரைவில் மாற்றம் செய்யப்படுவதாக வருவாய்த்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தற்போது மணல் திருட்டு பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் புகாரில் உள்ள மணல் அள்ளும் பொக்லைன் இயந்திரத்தை மணல் திருடும் கும்பலே கொண்டு வந்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் மணல் திருடும் பகுதியில் உள்ள மறைவிடத்தில் பொக்லைன் இயந்திரம் இருந்ததை கொண்டு வந்து நிறுத்தியுள்ளோம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். கடந்த 19ம் தேதி மர்மநபர்கள் அனைத்து வாகனங்களையும் எடுத்து சென்றுவிட்டனர் என வருவாய்த்துறையினர் புகார் கொடுத்தனர். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, நாங்கள் உள்ளாட்சி தேர்தல் பணியில் இருக்கிறோம். தேர்தல் பணி முடிந்தவுடன் அனைத்து லாரிகளையும் பிடித்து விடுவோம் என்றனர்.

Related Stories: