தண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் பெண்ணை தாக்கிய அமமுக வேட்பாளர் உள்பட இருவர் கைது

மன்னார்குடி, டிச. 18: திருமக்கோட்டை அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் தொடர்பாக பெண் மீது தாக்குதல் நடத்தியதாக வந்த புகாரின் பேரில் மேலநத்தம் அமமுக வேட்பாளர் மற்றும் அவரது உறவினர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை காவல் சரகத்திற்குட்பட்ட மேல நத்தம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (52). இவர் உள்ளாட்சி தேர்தலில் மேலநத்தம் ஊராட்சி மன்ற தலைவருக்கு அமமுக சார்பில் போட்டியிடுகிறார். இவர் வீட்டிற்கு அருகே வசிப்பவர் லதா (45). கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

ராஜேந்திரனுக்கு லதாவிற்கும் இடையில் பொது குழாயில் தண்ணீர் பிடிப்பது சம்பந்தமாக நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜேந்திரன் வீட்டை விட்டு வெளியே வந்த போது லதா அவரை ஜாடையாக பேசியதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், அவரின் உறவினர் கரிகாலன் (39) மற்றும் மற்றொரு நபர் ஆகிய மூவரும் சேர்ந்து லதாவை சரமாரி தாக்கியனர். இதில் காயமடைந்த லதா மன்னார்குடி மாவட்ட அரசு தலை மை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்க பட்டுள்ளார்.இதுகுறித்து திருமக்கோட்டை காவல் நிலையத்தில் லதா அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொ ) சிரஞ்சீவி உத்தரவின் பேரில் எஸ்ஐ முத்து காமாட்சி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரன் மற்றும் கரிகாலன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: