திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 18 ஒன்றியங்களில் பயிற்சி கலெக்டர் பார்வையிட்டார்

திருவண்ணாமலை, டிச.16: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று 18 ஒன்றியங்களில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27ம் தேதி மற்றும் 30ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 860 கிராம ஊராட்சிப் பகுதிகளில் 3,520 வாக்குச்சாவடி மையங்களில் இரு கட்டங்களான தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் 40 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 1,105 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட மொத்தம் 29,387 அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றியங்களிலும் நடைபெற்றது.திருவண்ணாமலையில் டேனிஷ்மிஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பார்வையிட்டார். அப்போது, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களிடம் தேர்தல் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். வாக்குப்பதிவில் சந்தேகங்கள் இருந்தால் பயிற்சி வகுப்பில் அதனை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். கலெக்டர் ஆய்வின் போது, பிடிஓக்கள் அண்ணாதுரை, ஆனந்தன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் மற்ற ஒன்றியங்களில் நடைபெற்ற தேர்தல் பயிற்சி வகுப்பினை பார்வையிட புறப்பட்டு சென்றார்.

Related Stories: