திருப்போரூர் அருகே பரபரப்பு புங்கேரி ஏரி மதகு உடைந்து கிராமத்தில் வெள்ளநீர் சூழ்ந்தது: அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை

திருப்போரூர், டிச.13: திருப்போரூர் ஒன்றியம் பனங்காட்டுப்பாக்கம் ஊராட்சி புங்கேரி கிராமத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் சித்தேரி உள்ளது. இந்த ஏரியின் மதகு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்தது. இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு புதிய மதகு அமைக்கப்பட்டது. இதைதொடர்ந்து, கடந்த 1 வாரத்துக்கு முன் பெய்த கனமழையால், இந்த ஏரியில் நீர் நிரம்பியது. இந்நிலையில், நேற்று காலை சுமார் 10 மணியளவில் இந்த ஏரியை ஒட்டிய நிலங்களில் விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபட்டனர். அப்போது நிலத்தை ஒட்டிய கால்வாய்களில் தண்ணீர் அதிகமாக வந்தது. இதை பார்த்த அவர்கள், யாராவது மதகைத் திறந்து விட்டிருப்பார்கள் என நினைத்து ஏரியின் அருகே சென்று பார்த்தனர்.

அப்போது ஏரியின் மதகு உடைந்து வெள்ளநீர் வெளியேறி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே, கிராம மக்களை திரட்டி, மதகில் ஏற்பட்ட உடைப்பை அடைக்க முயற்சி செய்தனர். அதற்குள் மதகு முழுவதுமாக உடைந்து, ஏரியில் நிரம்பி இருந்த நீர் முழுவதும் வெளியேற துவங்கியது. இதையொட்டி, ஏரியை ஒட்டிய சுமார் 150 ஏக்கர் நிலத்தில் இருந்த நெற்பயிர்கள் மூழ்கியது.

மேலும், விவசாய நிலங்களை ஒட்டி இருந்த வசந்தி அம்மன் கோயில் தெரு, புது நகர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்தது.ங தகவலறிந்து வண்டலூர் வட்டாட்சியர் செந்தில், கூடுதல் வட்டாட்சியர் ஸ்ரீதர், திருப்போரூர் ஒன்றிய ஆணையாளர் பிரகாஷ்பாபு ஆகியோர் புங்கேரி பகுதிக்கு சென்றனர். அங்கு வந்த அதிகாரிகளை, பொதுமக்கள் சூழ்ந்து முற்றுகையிட்டு, ஒரு ஆண்டுக்கு முன் புதிதாக அமைக்கப்பட்ட மதகு எப்படி உடைந்தது என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர். மேலும், விவசாய நிலங்களில் பணிகளை மேற்கொண்டபோது, இதுபோன்று நடந்ததால், தங்களுக்கு ஏராளமான பொருளாதார இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து, புதிய தரமான மதகை கட்டித்தர வேண்டும். வெள்ளத்தில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Related Stories: