ரயில்வே காலிப் பணியிடங்களுக்கான தகுதிகளை தமிழக இளைஞர்கள் வளர்த்து கொள்ள வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

செங்கல்பட்டு,டிச.13: ரயில்வே காலி பணியிடங்களுக்கான தகுதிகளை  தமிழக இளைஞர்கள்  வளர்த்து கொள்ள வேண்டும் என ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியில் ரயில்வே பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் சிதம்பரவிநாயகம் தலைமை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினர்களாக  ரயில்வே டிஐிபி சி.சைலேந்திரபாபு, ரயில்வே ஐஜி வி.வனிதா ஆகியோர் கலந்து கொண்டு ரயில்வே பாதுகாப்பு தொடர்பாக மாணவர்களுடன் கலந்துரையாடினர். அப்போது, டிஜிபி சைலேந்திரபாபு பேசியதாவது. இன்று அரசு பணியில் சிறப்பாக செயல்படும் அனைவரும் அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரிகளில் படித்தவர்கள்தான். அரசு பள்ளியில் படித்தவர்களே சாதித்து காட்டியுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ரயில்வே துறையில் காலியாக இருந்த 1 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் தமிழக இளைஞர்களின் பங்கு குறைவாக உள்ளது. தமிழக இளைஞர்கள் ரயில்வே துறை காலி பணியிடங்களை பயன்படுத்தி கொள்ளவில்லை. இந்த பணியிடங்களுக்கான தகுதிகளை கல்லூரி மாணவர்கள் வளர்த்து கொள்ளவேண்டும். தற்போது அனைத்து துறைகளிலும் போட்டி தேர்வுகள் அதிகரித்துவிட்டன. வேலை வாய்ப்புகள் உலகளவில் பரந்து கிடக்கின்றன. இவற்றை பயன்படுத்தி கொள்ள மாணவர்கள் ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். திரைத்துறை நடிகர், நடிகைகளை புரிந்து வைத்திருக்கும் மாணவர்கள், முதலில் தங்களை புரிந்து கொள்ள வேண்டும். உலகை அறிந்து கொள்ளவேண்டும் என்றார். துணை முதல்வர் கிள்ளிவளவன், வணிகவியல் துறை தலைவர் ரெமா மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: