மறைமலைநகர் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் கடும் பீதி: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

செங்கல்பட்டு, டிச.13: மறைமலைநகர் அருகே, சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். சிறுத்தை வந்து செல்லும் பகுதிகளை, வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மறைமலைநகர் அடுத்த செங்குன்றம் அலமேல் மங்காபுரத்தை சேர்ந்தவர் சித்ரா (35) கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகில், நீண்ட நேரமாக நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. இதனால், திடுக்கிட்டு எழுந்த அவர், வெளியே வந்து பார்த்தார். அப்போது ஒரு சிறுத்தை பயங்கர சத்தத்துடன் ஓடுவதை பார்த்தார். மேலும் அவரது வீட்டின் அருகில 2 நாய்கள் கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து செங்கல்பட்டு வனசரகர் பாண்டுரங்கன் மற்றும் வனகாவலர்கள் அந்த பகுதியில் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

பின்பு சென்னையில் இருந்து நவீன கண்காணிப்பு கேமரா வரவழைக்கப்பட்டு, அலமேலு மங்காபுரம் வனப்பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே பொருத்தப்பட்டது. இதுகுறித்து வனறையினர் கூறுகையில், ஒரு ஆண் சிறுத்தை, வனப் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக இருக்கிறது. வண்டலூர் முதல் செங்கல்பட்டு வரை வனப்குதியில் அடிக்கடி தண்ணீர் குடிக்க அஞ்சூர், தென்மேல் பாக்கம், திருவடி சூலம், திருமணி ஆகிய பகுதிகளில் வந்து செல்லும். தற்போது மழை பெய்துள்ளதால் தண்ணீரைதேடி வெளியில் வராது. வீட்டின் அருகில் இருந்தது சிறுத்தையின் கால்தடம் இல்லை. ஆனால் இந்த பகுதியில் அய்நாவா விலங்குகள் அதிகமாக உள்ளன. அந்த அய்நாவாக்கள், சிறுத்தை போல இருக்கும். அது அழுகிய இறந்த உடலை மட்டுமே விரும்பி சாப்பிடும். குறிப்பாக அதற்கு நாய் பிடித்தமான உணவாகும். பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று குடியிருப்பு பகுதி அருகே காட்டில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

கேமராவில் விலங்கின் நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டால், அது சிறுத்தையா அலது அய்நாவா என கண்டறித்து அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பகுதி வனத்துறையினர் கண்காணிப்பில் இருப்பதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து சிறுத்தை, ஏதேனும் வந்துவிட்டதா என சந்தேகம் உள்ளது. அனுமந்தபுரம், அஞ்சூர் பகுதிகளை வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பிடிபட்டால் அவற்றை வண்டலூர் அல்லது அடர்ந்த காட்டுப்பகுதியில் விட வேண்டும், இந்த சம்பவத்தால் பெண்கள், குழந்தைகள் பெரும் அச்சத்தில் உள்ளனர் என்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: