அடிப்படை வசதி செய்து தராததால் மணலூர் கிராம பொதுமக்கள் அவதி

பாபநாசம், டிச. 11: பாபநாசம் அருகே மணலூர் பகுதியில் அடிப்படை வசதி செய்து தரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.தஞ்சை மாவட்டம் பாபநாசம்- சாலியமங்கலம் மெயின் ரோட்டில் உள்ளது மணலூர் பகுதி. இந்த ஊரில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மணலூரில் புதுகுடி, சோத்தமங்களம், மணக்குண்டு, நாகமங்கலம், மங்களம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக மயானச்சாலை படுமோசமான நிலையில் உள்ளன.

Advertising
Advertising

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மதிமுக ஒன்றிய செயலாளர் பிரதாப் கூறுகையில், இந்த ஊரில் பலரது வீடுகளில் தனிநபர் கழிப்பறை இல்லாததால் பெண்கள் உள்ளிட்டோர் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த ஊரிலுள்ள பொது சுகாதார வளாகம் பழுதடைந்து கிடப்பதால் பயன்படுத்த முடியவில்லை. இதேபோன்று துணை சுகாதார நிலையம் அருகிலுள்ள சுகாதார வளாகமும் பயன்பாட்டில் இல்லை. இந்த ஊரிலுள்ள வடிகால் வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத காரணத்தால் தண்ணீர் செல்வதில் சிரமம் உள்ளது. நாகமங்கலம், வெள்ளத்திடல் கிராம மக்கள் பயன்பாட்டில் உள்ள சுடுகாட்டுக்கு சாலை வசதி கிடையாது. இந்த ஊரிலுள்ள துணை சுகாதார நிலையத்தில் வாரத்துக்கு 2 நாட்களாகவது மருத்துவர் வர வேண்டும். தற்போது செவிலியர் மட்டுமே வந்து செல்கின்றனார். இதேபோன்று இந்த ஊரிலுள்ள சமுதாய கூடம் தரைத்தளம் சேதமடைந்துள்ளது. மகளிர் குழு கட்டிடத்தின் மேற்கூரையும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என்றார்.

Related Stories: