பணி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஆஞ்சநேயர் கோயில் பட்டாச்சாரியார் மருத்துவமனையில் அனுமதி

நாமக்கல், டிச.10:  நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அதிகாரி மீது டார்ச்சர் புகார் தெரிவித்து, பணி மறுக்கப்பட்ட பட்டாச்சாரியார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுளளது. நாமக்கல் நரசிம்மசுவாமி கோயில் உதவி ஆணையராக பணியாற்றி வரும் ரமேஷ்(45) என்பவர், கடந்த வாரம் எஸ்.பி. அருளரசுவை சந்தித்து புகார் மனு அளித்தார். அதில், ஆஞ்சநேயர் கோயில் மற்றும் நரசிம்ம சுவாமி கோயிலை பற்றியும், தன்னைப் பற்றியும் வாட்ஸ் அப் குரூப்களில் அவதூறு பரப்பி வருகின்றனர். எனவே, அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி முதல், கோயில் பட்டாச்சாரியார் வெங்கடேசனுக்கு கோயிலில் பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெங்கடேச பட்டாச்சாரியார் உதவி ஆணையரை சந்தித்து கேட்டுள்ளார். அப்போது, “வெங்கடேச பட்டாச்சாரியார் அட்மினாக இருக்கும் வாட்ஸ்அப் குருப்பில் தான், தன்னைப் பற்றியும், கோயிலை பற்றியும் அவதூறு பரப்பப்படுகிறது. அதற்கு உரிய விளக்கம் அளித்து எழுதி தர வேண்டும் என உதவி ஆணையர் கூறியுள்ளார். இதனால், வெங்கடேச பட்டாச்சாரியார் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று  வீட்டில்  திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்களின் சிகிச்சைக்கு பின்பு நேற்று மாலை குணமடைந்தார்.

இதுகுறித்து வெங்கடேச பட்டாச்சாரியார் கூறுகையில், ‘கடந்த 4ம் தேதி முதல் எனக்கு கோயிலில் பூஜை செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இதுகுறித்து உதவி ஆணையர் வாய்மொழியாக என்னை அழைத்து கூறினார். அவர் கொடுத்த  டார்ச்சரால் தான் உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரைப்பற்றியும், கோயிலை பற்றியும் வாட்ஸ்அப் குருப்பில் நான் பதிவிடவில்லை,’ என்றார். இதுதொடர்பாக கோயில் உதவி ஆணையர் ரமேஷூடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:வெங்கடேச பட்டாச்சாரியார் நேற்று முன்தினம் மாலை 4 மணி வரை கோயிலில் தான் இருந்தார். மாலை 6 மணிக்கு வருவதாக என்னிடம் கூறிவிட்டுச் சென்றார். அவரை எந்த வகையிலும் நான் டார்ச்சர் செய்யவில்லை. உதவி ஆணையருக்கு உரிய பணியை தான் செய்து  வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: