தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு எதிரொலி மக்கள் குறைத்தீர்வு கூட்டம் திடீர் ரத்தால் மக்கள் ஏமாற்றம்

வேலூர், டிச.3: உ:ள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு காரணமாக மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் எடுத்து வந்திருந்த மனுக்களை அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டுச்சென்றனர்.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்து வருகிறது. அதன்படி, திங்கட்கிழமையான நேற்று அதிகாலை முதலே கலெக்டர் அலுவலக வளாகம் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் காயிதே மில்லத் அரங்கம் அருகே பொதுமக்கள் மனுக்களுடன் காத்திருந்தனர். சுமார் 10 மணியளவில் தமிழகத்தில் வரும் 27ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அதிரடியாக அறிவித்தார். இதுகுறித்த தகவல் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலக ஊழியர்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் காயிதே மில்லத் அரங்க நுழைவு வாயில் கதவுகளில் ‘உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்துள்ள நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்தாகிறது’ என்ற அறிவிப்பு நோட்டீஸை ஒட்டினர். இதனை பார்த்து அங்கு மனு அளிக்க காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து, மதியம் 12 மணியளவில் சிவசக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தை சேர்ந்த 2 பேர் சிவன் மற்றும் ராமர் வேடமணிந்து வந்தனர். மக்கள் குறைதீர்வு கூட்ட அரங்கம் மூடப்பட்டிருந்ததால் அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க சென்றனர். முன்னதாக அவர்கள் கூறுகையில், ‘வி.சி. கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்து கடவுள் மற்றும் மதவழிப்பாட்டை அவமதித்து பேசி வருகிறார். அவரை கைது செய்ய வேண்டும்’ என்றனர்.

கலெக்டர் அலுவலகத்துக்கு திடீரென சிவன் மற்றும் ராமர் வேடமிட்டு வந்தவர்களால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரத்தில் வழக்கமாக மக்கள் குறைதீர்வு கூட்டம் மதியம் 2 மணி வரை நடக்கும் என்பதால், கூட்டம் ரத்து செய்யப்பட்ட தகவலை அறியாத பொதுமக்கள் மதியம் 12 மணிக்கு மேல் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர். அங்கு வந்த பிறகு கூட்டம் ரத்து செய்யப்பட்ட தகவலை அறிந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனைக் கண்ட அதிகாரிகள், பொதுமக்கள் மனு அளிக்க வசதியாக குறைதீர்வு கூட்டம் நடக்கும் கட்டிடத்தின் வாயிலில் பெட்டி வைத்தனர். அதில் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த கோரிக்கை மனுக்களை போட்டுவிட்டுச் சென்றனர்.

Related Stories:

>