சீனாவில் நடக்கும் சர்வதேச திறன் போட்டியில் பங்கேற்க ஓர் அரிய வாய்ப்பு படிக்காத தொழில் திறனாளிகளும் விண்ணப்பிக்கலாம்

திருச்சி, நவ.27: சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 2021 செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேசத் திறன் போட்டியில் பங்கேற்க ஏதுவாக தொடக்க நிலையில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க https://worldskillsindia.co.in/worldskill/world/ என்ற இணையதளத்தில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்டுகின்றனர். 6 துறைகளில் உள்ள 47 தொழிற் பிரிவுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக ஜனவரி 6 முதல் 10 வரை நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் டிசம்பர் 15 ஆகும்.

வயது வரம்பு: 1.1.1999 அன்றும், அதற்குப் பிறகும் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சில தொழிற் பிரிவுகளுக்கு 1.1.1996 அன்றும், அதற்குப் பிறகும் பிறந்தவர்கள் தகுதியுடையவர்களாவர். ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை கல்வித் தகுதி பெற்றவர்கள் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் மற்றும் படித்து கொண்டிருப்பவர்கள், தொழிற் பயிற்சி நிலையம், தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் படித்துக் கொண்டிருப்பவர்கள், தொழிற்சாலையில் பணியில் உள்ளவர்கள், குறுகிய கால தொழிற் பயிற்சி பெற்றவர்கள் ஆகிய அனைவரும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். கல்வித்தகுதி இல்லையெனிலும், தொழிற்திறன் பெற்றவர்களாக இருப்பின் அவர்களும் விண்ணப்பித்து போட்டியில் பங்கேற்கலாம்.

இப்போட்டிகளில் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலும், மாநில அளவில் தேர்வு செய்யப்படுபவர்கள், இந்திய அளவில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்று, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களை மேற்கண்ட இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் இஸ்மத் பானுவை 8825787097 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: