அரியலூர் மாவட்ட வரைபடத்தில் செம்பியன்மாதேவி, ராஜேந்திர சோழன் படம் வரைந்து மாணவர்கள் சாதனை

அரியலூர், நவ. 27: அரியலூர் மாவட்ட வரைபடத்தில் வரலாறை நினைவு கூறும் வகையில் சோழப்பேரரசி செம்பியன் மாதேவி, மாமன்னன் ராசேந்திர சோழனின் உருவப்படம் வரைந்து பள்ளி மாணவர்கள் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் உலக வரலாற்றில் மிக தொன்மையான வரலாறு கொண்டது. ஆன்மிகம், கட்டிடக்கலை, கப்பல் படை, கப்பல் கட்டுமானம், கலை ஞானம், இசை, தச்சு வேலைகள், நெசவு தொழில், சிறு தானிய உற்பத்தி என பல துறைகளில் சிறந்து விளங்கியும், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நீர் நிலைகள் உருவாக்கியும், காசிக்கு பிறகு கொள்ளிடம் ஆறு வடக்கு நோக்கி பாயும் அதிசயமான புவி அமைப்பை உடையது. இங்கு பாரம்பரியம் மிக்க பல்வேறு சிறப்புகள் உள்ளது.

தற்போதைய தமிழக அரசின் வரைமுறைப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் அகர வரிசையில் முதல் இடத்தில் இடம் பெற்றுள்ள அரியலூர் மாவட்டத்தின் புகழை இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 434 பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், வரலாறு மீட்பு குழுவினர் இணைந்து மாவட்டத்தின் பெருமைகளை நினைவு கூறும் வகையில் மாவட்ட வரைபடம் வடிவமைக்கப்பட்டது.

அரியலூர் மாவட்ட வரைபடத்தை பள்ளி வளாகத்தில் இயற்கையாக வளர்ந்திருக்க கூடிய புற்களை அகற்றி வடிவமைக்கப்பட்டது. 1,000 ஆண்டுகளுக்கு முன் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் கடல் வாணிபம் மற்றும் கடல் வழித்தடம் அமைத்து சிறந்த கப்பல் கட்டுமான தொழில்நுட்பத்தை உலகுக்கு தந்து ஆட்சிபுரிந்த மாமன்னன் ராசேந்திர சோழனின் உருவப்படம் மற்றும் சோழப்பேரரசி செம்பியன் மாதேவி உருவப்படம் பொறிக்கப்பட்டு அவர்களது வரலாற்றை நினைவு கூறும் வகையில் அரியலூர் மாவட்ட வரைபடத்தில் வரையப்பட்டது.

வரலாறு மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் தங்க.சண்முகசுந்தரம், கீழக்காவட்டாங்குறிச்சி பள்ளி ஓவிய ஆசிரியர் மாரியப்பன், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து 5 மணி நேரம் கடின முயற்சி செய்து இந்த வரைபடத்தை வரைந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக்குமார், உதவி தலைமை தலைமை ஆசிரியர் கலைச்செல்வன், உடற்கல்வி ஆசிரியர் ராஜசேகர், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பிரேமா உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: