12ம் வகுப்பு இயற்பியல் பருவதேர்வில் நடத்தாத பாடங்களில் கேள்விகள் கேட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி..!

திருமங்கலம், நவ.22: 12ம் வகுப்பு மாதாந்திர இயற்பியல் பருவதேர்வில் நடத்தாத பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதால் மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

மதுரை மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் தற்போது மாதாந்திர இரண்டாம் பருவபொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் பிளஸ்டூ மாணவர்களுக்கு இயற்பியல் தேர்வு நடந்தது. இதில் கேள்விதாள்களில் மதுரை மாவட்டத்திற்கு பதிலாக கோவை மாவட்ட கேள்வித்தாள்கள் விநியோகம் செய்யப்பட்டது. மதுரை மாவட்டத்தில் இயற்பியலில் பருவத்தேர்வுக்கு 6 மற்றும் 7ம் பாடங்கள் மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டுள்ளதால் அவற்றில் இருந்துதான் கேள்விகள் வரும் என ஆசிரியர்கள் கூறியிருந்தனர். அதன்படி இந்த இரண்டு பாடங்களை மட்டும் படித்து வந்த மாணவ, மாணவியர்களுக்கு கேள்விதாள்களில் நடத்தாத 8 மற்றும் 9ம் பாடங்களிலிருந்து அதிகளவில் கேள்விகள் வந்திருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல மாணவ, மாணவியர்கள் வினாத்தாள்களை பார்த்து கண்ணீர்விட்டு அழுதுவிட்டனர்.

இது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘மதுரை மாவட்டத்தில் பிளஸ்டூ தேர்வு இயற்பியல் பாடத்தில் இரண்டாம் பருவத்தில் 6 மற்றும் 7ம் பாடங்கள் மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் 6 முதல் 9 வரையிலான பாடங்கள் நடத்தப்பட்டுவிட்டன. இதற்கு காரணம் நமது மாவட்டத்திற்கு இயற்பியல் புத்தகம் காலதாமதமாக ஒருமாதம் கழித்து வழங்கப்பட்டது. அதனால் ஆசிரியர்களால் பாடங்களை முடிக்க இயலவில்லை. அதே நேரத்தில் மாவட்ட வாரியாக கேள்விதாள்கள் பருவத்தேர்வுகளில் வழங்கப்படுவது வழக்கம்.

மதுரை மாவட்ட கேள்விதாள்களுக்கு பதிலாக கோவை மாவட்ட கேள்விதாள்கள் நமது மாவட்டத்தில் விநியோகம் செய்யப்பட்டதால் இந்த குளறுபடி ஏற்பட்டது. ஒருசில பள்ளிகளில் ஆசிரியர்களே நடத்தாத கேள்விகளை தவிர்க்கும்படி அறிவுறுத்தி நடத்திய 6 மற்றும் 7ம் பாடங்களில் இருந்து கேள்விகளை மாற்றி கொடுத்தனர். ஆனால் பெருவாரியான பள்ளிகளில் மாற்றவில்லை. இதனால் மாணவர்கள் மாத பருவத்தேர்வில் இந்த முறை இயற்பியில் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்’ என்றனர்.

Related Stories: