காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி சாதனையாளர் விருது

காஞ்சிபுரம், நவ.20: காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த, அரசு பள்ளி ஆசிரியர்கள் 3 பேருக்கு கல்வி சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. உயிர் தளிர் ஆராய்ச்சி மற்றும் வள நிறுவனம் மற்றும் பெண்ணிய நிறுவனம் இணைந்து கோயமுத்தூரில் நடத்திய கருத்தரங்கில் பல்துறை சாதனையாளர்களுக்கான விருது வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் சேகர், பள்ளி மாணவர்களை அறிவியலில் மாணவர்களை வெளிக்கொணரும் செயல்பாடுகளில் சிறந்து விளங்குகிறார். கிராமப்புற மாணவர்களை கொல்கத்தா சர்வதேச அறிவியல் திருவிழாவில் பங்கேற்க செய்து, அவர்களுக்கு விமான பயண அனுபவத்தை அளித்துள்ளார்.

காவாந்தண்டலம் நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சரவணன், ஊரக பகுதி மாணவர்களுக்கு தனது சொந்த முயற்சியில் கணினி மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தின் மூலமும் ஆடல், பாடல் மூலமும் உற்சாகமுடன்  எளியவழியில் கல்வி கற்பித்து வருகிறார். இளையனார் வேலூர் தொடக்கப்பள்ளி  இடைநிலை ஆசிரியர் ரமேஷ், கற்றல் கற்பித்தலை நாடக வடிவிலும் பொம்மலாட்டம் மற்றும் கலைவழியிலும் கிராமப்புற மாணவர்களுக்கு சொந்த முயற்சியில் தகவல் தொழிற்நுட்பம் மற்றும் கைபேசி செயலிகள் மூலமும் கற்றல் ஆர்வத்தை ஏற்படுத்தி தனியார் பள்ளிக்கு இணையாக  அரசு பள்ளியை உயர்த்தி வருகிறார். இதையொட்டி, மேற்கண்ட 3 அரசு பள்ளி ஆசிரியர்களை பாராட்டி, கல்வி சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பிடிஎம்டிஎம் கல்லூரி உதவி பேராசிரியர் பால்பாண்டி ஒருங்கிணைத்து விருதுகளை வழங்கினார்.

Related Stories: