குைறதீர் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி, நவ. 13: உசிலம்பட்டியில் குறைதீர் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள், திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தின் கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் உசிலம்பட்டி தாசில்தார் செந்தாமரை தலைமையில், அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்றது. அதில் விவசாயிகள் கூறும்போது, செல்லம்பட்டி ஒன்றியத்திலுள்ள சங்கரப்பநாயக்கனூரில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை நில அளவை செய்து அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும். உசிலம்பட்டி அருகேயுள்ள 300 ஆண்டுகால பழமைவாய்ந்த சித்தர்மலை சிவன்கோவில் பாதை வருவாய் ஆவணத்தில் இல்லை. இதனால் இப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கோவிலுக்கு செல்ல பாதையை சீர் செய்யவேண்டும். மலைமேல் பக்தர்கள் செல்லும் போது பாதைகள் அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும். பழமையான கோவிலை பாதுகாக்க கோவிலைச்சேர்ந்த ஊராட்சி நிதியிலிருந்து பராமரிக்கப்பட வேண்டும். கோவிலுக்கு குடிநீர், பாதை, விளக்குகள், உள்ளிட்ட அடிப்படை வசதி அமைத்து தரவேண்டும். திம்மநத்தம் ஊராட்சியிலுள்ள சுப்பிரமணியசாமி கோவில் மானியநில ஊருணியை ஆக்கிரமித்துள்ளவர்களிடமிருந்து நில அளவை செய்து மீட்டுத்தர வேண்டும். நீர்வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படவேண்டும் என்று கூறினார்கள்.

மனிதர்கள் தண்ணீர் குடிக்க மினரல் வாட்டரை பணம் கொடுத்து வாங்கி குடிக்க முடியும், ஆடு, மாடுகள் குடிநீருக்கு எங்கே செல்லும். எனவே 58 கிராம பாசன விவசாயிகள் வைகை அணைத்தண்ணீரை திறக்க வேண்டும் எனக்கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் திடீரென சாக்குப்பையில் கொண்டுவரப்பட்ட தண்ணீர் வேண்டும், வைகை அணைத்தண்ணீரை திற உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப்பார்த்த தாசில்தார் செந்தாமரை உங்கள் கோரிக்கை மீதான நடவடிக்கையை எடுக்க சொல்வோம் எனக் கூறினார். அதற்கு விவசாயிகள் வெளிநடப்பு செய்து தாலுகா அலுவலக வாசலில் மீண்டும் போராட்டம் நடத்தினர். அதில் தண்ணீர் திறந்து விடும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றும், ஒவ்வொருமுறை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை இதேபோல் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் எனக்கூறினார்கள். இதனால் தாலுகா அலுவகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: