சீமாறுக்கு மவுசு போச்சு

பழநி, நவ. 12: சீமாறுக்கு போதிய மவுசு இல்லாததால் பழநி அருகே குதிரையாறு அணை  மலைவாழ் மக்கள் போதிய வருமானமின்றி வறுமையில் வாடுகின்றனர். பழநி அருகே ஆண்டிபட்டி ஊராட்சிக்குட்பட்டது குதிரையாறு அணை உள்ளது. இந்த அணையின் மேலே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பளியர் இன மலைவாழ் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இம்மக்கள் காடுகளில் தேன் எடுத்தல், கடுக்காய்- நெல்லி சேகரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் 50க்கும் மேற்பட்டோர் வீடு மற்றும் தொழிற்கூடங்களை சுத்தம் செய்யும் சீமாறு செய்ய பயன்படும் நார்களை சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். காடுகளில் பறித்து கொண்டு வரும் இந்நார்கள் பின் சீமாறாக வடிவம் பெற்று விற்பனைக்கு வருகின்றன. ஆனால் காடுகளில் வாரக்கணக்கில் தங்கி நார்களை பறித்து வரும் இப்பளியர் இனமக்கள் போதிய வருமானமின்றி வறுமையில் தவித்து வருகின்றனர். இதுகுறித்து ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்களில் ஒருவரான நிக்கில் என்பவர் கூறியதாவது,

‘காடுகளில் வெயில் அடிக்கும் நேரங்களில் சீமாறு நார்கள் பொறுக்க செல்வோம். ஒருவார காலம் தங்கியிருந்து இந்நார்களை பறித்து கொண்டு வருவோம். இதற்காக கழுதைகளை பாப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாடகைக்கு எடுத்து செல்வோம். எங்களில் பலர் வியாபாரிகளிடம் முன்பணம் பெற்று நாள் கூலிக்கு வேலை செய்து வருகின்றனர். காட்டிற்கு செல்லும்போது எங்களுக்கு தேவையான உணவு போன்ற அடிப்படை வசதிகளை எங்கள் சொந்த பொறுப்பிலே தான் எடுத்து செல்வோம். செலவு போக வாரம் ஒன்றிற்கு ரூ.500 அளவே ஊதியம் கிடைக்கும். ஆனால் இதனை பெற்று செல்லும் ஏஜெண்டுகள் வியாபாரிகளிடம் ஆயிரக்கணக்கில் பணம் பெற்று கொள்கின்றனர். மழை, குளிர் போன்ற காலங்களில் இந்நார்களை பறிக்க முடியாது. இக்காலங்களில் வேலையின்றியே திரிய வேண்டி வரும். செல்லும் காட்டுப்பகுதிகளில் விலங்குகளிடம் இருந்து தப்பித்து உயிரை பனையம் வைத்து இந்நார்களை கொண்டு வந்தாலும், அதற்குரிய விலை கிடைப்பதில்லை.

மேலும், தற்போது இந்நார்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து விட்டது. வீடுகளில் பிளாஸ்டிக் உறை கொண்ட நூலிழைகளை கொண்டும், தொழிற்சாலைகளில் காற்று இயந்திரங்களை கொண்டும் சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. எனவே, போதிய விற்பனை இல்லை எனக்கூறி வியாபாரிகள் உரிய ஊதியம் தர மறுக்கின்றனர். அவர்களை எதிர்த்து பேச முடியாதவர்களாய் நாங்கள் உள்ளோம். எனவே,  அரசு உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்று காடுகளில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யும் எளிய பயன்பாட்டு பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.   

Related Stories:

>