சிக்னல் இல்லாததால் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்கள் சாலமங்கலம் கூட்டு சாலையில் அடிக்கடி விபத்து

பெரும்புதூர், நவ.12: வண்டலூர்- வாலாஜாபாத் சாலை சாலமங்கலம் கூட்டுச்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் ஜிக் ஜாக் வளைவு, சிக்னல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

பெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா கடந்த 2007ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு கார், லாரி, கம்ப்யூட்டர், செல்போன், டயர் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பன்னாட்டு தனியார் தொழிற்சாலைகள் தொடங்கபட்டுள்ளன.

இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் பொருட்களை கொண்டு செல்ல, சாலை கட்டமைப்பு வசதி ஏற்படுத்த கடந்த 2008ம் ஆண்டு ₹300 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து பெரும்புதூர் - சிங்கபெருமாள்கோயில் சாலை, வண்டலூர் - வாலாஜாபாத் சாலைகள் அகலப்படுத்தி  சீரமைக்கப்பட்டன. தற்போது வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால் நான்கு வழிச்சாலையான வண்டலூர் - வாலாஜாபாத் சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்தி சீரமைக்க ₹150 கோடி நிதியை கடந்த 2016ம் ஆண்டு தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

மேலும் சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியும் நடக்கிறது. சாலமங்கலம், மாகாண்யம், நரியம்பாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் சாலமங்கலம் கூட்டுச்சாலையை கடந்து சென்று வருகின்றனர்.  மேலும் கூட்டுச்சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. தற்போது இந்த சாலை அகலப்படுத்தி உள்ளதால், கார், லாரி, பஸ் மற்றும் கனரக வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன. இதனால் சாலமங்கலம் கூட்டு சாலையில் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவிகள் சாலையை கடக்கும்போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பு சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்னறன.  இதையொட்டி, சாலமங்கலம் கூட்டு சாலையில் ஜிக் ஜாக் வளைவு அல்லது சிக்னல் அமைத்து, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொது வலியுறுத்துகின்றனர்.

Related Stories: