திருவள்ளூர் வடக்கு ராஜ வீதியில் 5 அடி பள்ளத்தில் இயங்கும் நகராட்சி பள்ளி

திருவள்ளூர், நவ. 12 : திருவள்ளூர் வடக்கு ராஜ வீதியில் இயங்கும் நகராட்சி நடுநிலை பள்ளியானது, ஆபத்தான கட்டிடத்தில் 5 அடி பள்ளத்தில் இயங்கி வருகிறது.  திருவள்ளூர் வடக்கு ராஜ வீதியில் நகராட்சி நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர்.  மேலும், இதே வளாகத்தில் அங்கன்வாடி மையமும் உள்ளது. இதில், 5 வயதுக்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயில்கின்றனர். கடந்த 1982 முதல் இக்கட்டிடத்தில் நகராட்சி பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலையில் இப்பள்ளி உள்ளது. இந்நிலையில், ஆண்டுதோறும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலைமேல் சாலை அமைப்பதால், பள்ளி கட்டிடமானது 5 அடி கீழே சென்றுவிட்டது.இதனால், மாணவர்கள் சாலையின் மட்டத்தில் இருந்து 5 அடி கீழே இறங்கி பள்ளிக்குள் செல்லும் அவலநிலை உள்ளது. இதனால், வகுப்பறைக்குள் காற்று வசதி இல்லாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். பள்ளி கட்டிடமும் சீரமைக்கப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது.அங்கன்வாடி குழந்தைகளும் உள்ளே செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, இப்பள்ளி கட்டிடத்தில் பயிலும் மாணவர்கள், அங்கன்வாடி குழந்தைகள் நலன்கருதி, புதிய பள்ளி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: