நாங்குநேரி மருத்துவமனையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

நாங்குநேரி, நவ. 8: நாங்கு நேரியில் செயல்பட்டு வரும் தாலுகா தலைமை மருத்துவமனைக்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் தினமும் வந்து செல்கின்றனர். இங்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நோயாளிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது.  மேலும் நாங்குநேரி பகுதியில் விஷக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் ஏராளமானோர் நாங்குநேரி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போதிய அளவில் படுக்கைகள் இல்லாததால் நெல்லை அரசு மருத்துவமனை போன்ற வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.  இதுகுறித்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நாங்குநேரியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஐயப்பன்(49) கூறுகையில், நாங்குநேரி அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக உள்நோயாளிகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் நோயாளிகள் கையில் ஊசியுடன் வெளியில் நடந்து சென்று கடைகளில் பாட்டில் தண்ணீரும், ஓட்டல்களில் வெந்நீரும் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இங்கு வருகின்றனர். அவர்களால் குடிநீருக்கு பெருந்தொகையை செலவிட வேண்டியுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே குப்பை கழிவுகள் மற்றும் உணவுக் கழிவுகள் சரிவர சுத்தம் செய்யப்படாததாலும், பினாயில், பிளீச்சிங் பவுடர் போன்றவை கொண்டு நோய் தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்படாததாலும் துர்நாற்றம் வீசுகிறது. இரவு நேரங்களில் வார்டுகளில் கொசுக்கடி மற்றும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ஆண்கள் வார்டில் மின்விசிறிகள் சரியாக இயங்கவில்லை. உள்நோயாளிகளுக்கு ஆண், பெண் இருபாலருக்கும் ஒரே ஒரு கழிவறை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. அதிலும் உள்தாழ்ப்பாள் இல்லாததால் கழிவறை கதவில் கயிறு கட்டி பயன்படுத்தி வருகிறோம். மருத்துவமனை நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால் அடிப்படை வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இங்கிருக்கும் சுகாதாரமற்ற சுற்றுச்சூழல் மேலும் நோயை உருவாக்கும் வகையில் உள்ளது. எனவே நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும், என்றார்.

Related Stories: