அடிப்படை வசதி கேட்டு மாதர் சங்கத்தினர் யூனியன் அலுவலகத்தை முற்றுகை

பேரையூர், நவ. 7: உத்தப்புரம் கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிக்கு அடிப்படை வசதிகோரி, சேடபட்டி யூனியன் அலுவலகத்தை மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியத்தில் உத்தப்புரம் கிராமம் உள்ளது. இங்குள்ள ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியில் போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். போதிய குடிநீர் வசதியில்லை. வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பெண்களுக்கு பொதுக்கழிப்பறை இல்லை. தெருக்களில் போதிய தெருவிளக்குகள் இல்லை. வாறுகால்கள் தூர்வாரப்படாமல் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், மர்மக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.இந்நிலையில், ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, மாதர் சங்கத்தினர் சேடபட்டி யூனியன் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். சங்க மாவட்ட செயலாளர் முத்துராணி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேடபட்டி ஒன்றியச் செயலாளர் ஜெயபால், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சங்கர், காசிமாயன், பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இது தொடர்பாக யூனியன் ஆணையாளர் கதிரவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆணையாளர் 4 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இதையடுத்து மாதர் சங்கத்தினர் கலைந்து சென்றனர்.

Advertising
Advertising

Related Stories: