வாடகை கட்டிடத்தில் இயங்கிய பின்னலாடை நிறுவனங்கள் மூடல்

திருப்பூர், நவ. 7:பின்னலாடை உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் விலையேற்றம், சர்வதேச சந்தையில் கடும் போட்டி, உள்ளிட்ட காரணங்களால் ஆயிரக்கணக்கான சிறு, குறு, நடுத்தர ஜாப்-ஒர்க் நிறுவனத்தினர் கட்டிடங்களை காலி செய்துள்ளனர்.திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நிட்டிங், டையிங், வாசிங், காம்பேக்டிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, எலாஸ்டிக், காஜா-பட்டன், பவர்-டேபிள் உட்பட பல ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்நிறுவனங்களில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 8 லட்சத்திற்கு அதிகமான  தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பணம் இல்லா வர்த்தகம் என்ற முறையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு, தொழில் நிறுவனங்களுக்கு தொடர் அழுத்தம் கொடுத்து வருவதால் பில் இல்லாமல் எந்த தொழிலும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இரண்டாம் கட்ட தொழில் முற்றிலும் தடைபட்டுள்ளது.

 பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. கவுன்சிலில் பதிவு பெறாத பவர் டேபிள் நிறுவனங்களுக்கு ஜாப்-ஒர்க் கொடுப்பது இல்லை. இதனால் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி வந்த 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட பவர் டேபிள் ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் இயக்கத்தை நிறுத்திக்கொண்டன. ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை கடந்த நிதியாண்டில் 11 சதவீதம் குறைந்துள்ளது. பணம் மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றால் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால், செலவினங்கள் அதிகரித்ததோடு சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து பங்களாதேஷ் வழியாக இந்தியாவிற்கு  பல கோடி மதிப்புள்ள ஆடைகள் மலிவான விலைக்கு விற்பனைக்கு வருகிறது.

இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடைகளின் விலைகளுக்கு ஏற்றவாறு  திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள்  விலைகளை நிர்ணயம் செய்ய வேண்டிய நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளன.  பல கோடி மதிப்புள்ள நவீன இயந்திரங்களை இறக்குமதி செய்து குறைவான தொழிலாளர்களை வைத்துக்கொண்டு அதிக உற்பத்தி செய்தால் மட்டுமே போட்டி நாடுகளுடன் போட்டியி–்ட்டு குறைவான விலைக்கு ஆடைகளை விற்பனை செய்ய முடியும்.

இதில், திருப்பூரில் இயங்கி வரும் பெரும்பாலான பவர் டேபிள் நிறுவனங்கள் வங்கிகளில் கடன் வாங்கி தொழில் செய்து வருகின்றனர். ஒரு சிலர் தனியார் நிதி நிறுவனங்களில் இடங்கள், தங்க சங்கிலி ஆகியவற்றை அடமானம் வைத்து வட்டிக்கு பணம் வாங்கி தொழில் செய்கின்றனர்.

  தொழில் நிறுவனங்கள் தைக்கும் ஆடைகளில் அதிக லாபம் இருந்தால் மட்டுமே தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவும், வட்டி, அசல் கட்ட முடியும் என்ற நிலை உள்ளது. தற்போது, சர்வதேச பின்னலாடை வர்த்தக சந்தையில் கடும் போட்டிகளை எதிர்கொள்வதால் ஆடைகளுக்கு வழங்கி வந்த கூலி ஒரே சீராக இருப்பதில்லை.    கடன் இன்றி சொந்த நிதியைக்கொண்டு இயங்கும் ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வருகிறது. இதில் கடன் வாங்கி தொழில் செய்து வந்த 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட பவர்-டேபிள் ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் தங்களுடைய இயக்கத்தை நிறுத்திக்கொண்டனர். கடன் வாங்கி தொழில் செய்த பலர் தொடர்ந்து தொழில் செய்ய முடியாமல் வாடகை கட்டிடங்களில் இயங்கிய ஆயிரக்கணக்கான சிறு, குறு, நடுத்தர பின்னலாடை உற்பத்தி மற்றும் ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் இயக்கத்தை நிறுத்தி இயந்திரங்களை காலி செய்துள்ளனர்.  மேலும் கட்டிட உரிமையாளர்கள் கடனை அடைக்க முடியாமல் திணறுகின்றனர். சில கட்டிடங்கள் ஏலத்திற்கு விட வங்கிகள் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர்.

  இது குறித்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் கூறியதாவது.‘‘பெரும்பாலான பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் கடன் வாங்கி வெளிநாடுகளில் கோடை, குளிர் கால ஆடைகளுக்கான ஆர்டர்களை உறுதிபடுத்தி நவீன இயந்திரங்கள் மூலம் குறைந்த தொழிலாளர்களை வைத்து அதிகமான உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இதிலும் பல நிறுவனங்கள் கடன் இன்றி தொழில் செய்ய துவங்கியுள்ளனர். காலி இடம் வைத்துள்ள பலர் வங்கிகளில் கடன் வாங்கி கட்டிடங்களை கட்டி பனியன் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கி வாடகைபணம் வசூலித்து வந்தனர்.  கடந்த காலங்களில் பில் இன்றி ஆடைகளை தைத்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வந்தனர். தற்போது அதிகாரிகளின் கெடுபிடியால் பில் இன்றி பொருட்கள் அனுப்புவது தடைபட்டுள்ளது. மேலும், புதிதாக தொழில் துவங்குபவர்கள் போதிய ஆர்டர் இன்றி, பழைய இயந்திரங்களை வைத்து ஆடை உற்பத்தியில் ஈடுபடுவதால் தொழிலில் நஷ்டம் ஏற்படுகிறது.

வாடகையை நம்பி கட்டிடங்கள் கட்டிய பலர் தற்போது எதிர்பார்த்த வாடகை கிடைக்காமலும், பல நிறுவனங்கள் கட்டிடங்களை காலி செய்துள்ளதால் வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் கட்டிடங்களின் உரிமையாளர்கள் தவிக்கின்றனர். திருப்பூரி–்ல் மட்டும் 500க்கு மேற்பட்ட கட்டிடங்கள் பல்வேறு வங்கிகளால் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: