அரசின் அங்கீகாரம் இல்லாத நிதி நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்கலாம்

ஈரோடு, நவ. 7:  மத்திய அரசின் அங்கீகாரம் இல்லாத நிதி நிறுவனங்கள் குறித்து மக்கள் புகார் அளிக்கலாம் என ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி வேலுமணி கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம், கொப்பரை தேங்காய், ஈமு கோழி வளர்ப்பு திட்டம், ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் என குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் என மக்களிடம் ஆசை வார்த்தை கூறி முதலீடு பெற்று ஏமாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு வரை மக்களிடம் முதலீடு பெற்று ஏமாற்றினால் மட்டுமே புகார்கள் பெறப்பட்டு டான்பிட் நீதிமன்றங்கள் மூலம் நிவாரணம் பெற வேண்டியிருந்தது. தற்போது, மத்திய அரசால் பட்ஸ் (முறையற்ற பண முதலீடுகளை தடுக்கும் சட்டம்) என்ற புதிய சட்டம் நடப்பாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்த சட்டத்தில், வங்கி சாரா நிறுவனங்கள் மக்களிடம் முதலீடுகளை பெற இந்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்று பதிவு செய்திருக்க வேண்டும். அனுமதி பெற்ற நிதி நிறுவனங்கள் அதிகபட்சமாக 5 ஆண்டு முதிர்வு காலத்திற்குள் மட்டுமே முதலீடு பெற முடியும்.
Advertising
Advertising

மக்களிடம் முதலீடு பெறுவதற்கு பரிசு பொருட்கள், ஊக்கத்தொகை முதலியவற்றை தருவது தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பொதுமக்கள் முதலீடு செய்யும் நிறுவனத்தில், பணத்தை திருப்பி தரும் அளவிற்கு அந்நிறுவனத்திற்கு அசையும், அசையா சொத்துக்கள் உள்ளதா? என்றும் அறிந்து முதலீடு செய்ய வேண்டும். பரிசு சீட்டு மற்றும் பண சுழற்சி திட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற திட்டங்களில் மக்கள் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.  அரசின் அதிகாரப்பூர்வமற்ற நிதி நிறுவனங்கள் மற்றும் பண சுழற்சி திட்டங்கள் நடத்துவோர் பற்றி தகவல் இருந்தால் ஈரோடு எஸ்பி., அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். மேலும், தமிழ்நாடு காவல்துறை பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்திற்கு 044-22504332 அல்லது ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு 0424-2256700 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு வேலுமணி தெரிவித்தார்.

Related Stories: