அனைத்து தாலுகாவிலும் சீர்மரபினர் நலவாரிய அட்டை வழங்க வேண்டும்

வத்தலக்குண்டு, நவ. 6: அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் சீர்மரபினர் நலவாரிய அட்டை வழங்கும் முகாம் நடத்த வேண்டும் என நிலக்கோட்டையில் நடந்த தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிலக்கோட்டையில் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் 68 சீர்பழங்குடியினர் மக்கள் மத்திய, மாநில அரசின் சலுகைகளை பெறும் வகையில் சாதிச் சான்றிதழை பெற்று தந்த ஜோதிமுருகனுக்கு பாராட்டு விழா மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். ஏற்புரையாற்றிய ஜோதிராஜா, ‘டிஎன்சி, டிஎன்டி சாதிச் சான்றிதழை பெற்று கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் உயர வேண்டும். சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினர் அட்டையை வாங்கி அரசு ஒதுக்கிய நிதிகளை முறையாக பெற்று பயன் பெற வேண்டும்’ என்றார்.

கூட்டத்தில் சீர்மரபினர் நலவாரிய அட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது. பாமரர்கள் எளிதில் பெறும் வண்ணம் தாலுகா அலுவலகங்களில் சீர்மரபினர் நல வாரிய அட்டை வழங்கும் முகாம் நடத்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒருங்கிணைப்பாளர்கள் மொக்கைச்சாமி, கண்ணன், பழனிச்சாமி, வழக்கறிஞர் முத்துவேல், ரமேஷ் மற்றும் மாநில, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் விஜய் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை நிலக்கோட்டை ஒன்றிய நிர்வாகிகள் சௌந்தரபாண்டி, துரைச்சாமிபுரம் பாண்டி மற்றும் காமாட்சிபுரம் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Related Stories: