திருப்போரூர் அருகே செம்பாக்கம் ஏரியில் சுரங்கம் போல் தோண்டி எடுக்கும் மண்

திருப்போரூர், நவ.6:  திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் செம்பாக்கம் கிராமம் உள்ளது. இந்த பிரதான சாலையில் செம்பாக்கம் கிராமத்தின் பெரிய ஏரி பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மாவட்டத்தின்  அனைத்து ஏரிகளையும் பராமரிக்க வேண்டிய பொதுப்பணித் துறை, தூர் வாருவதாகவும், சாலைப் பணிகளுக்கு தேவையான மண் எடுப்பதாகவும் கூறி, இங்கிருந்து ஏரி மண்ணை எடுத்து விற்பனை செய்கிறது. அதன்படி பழைய மாமல்லபுரம்  சாலையின் புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்காக தேவையான மண்ணை செம்பாக்கம் ஏரியில் இருந்து எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து செம்பாக்கம் ஏரியில் கடந்த அக்டோபர் மாதம் 10 நாட்கள் மண் அள்ளப்பட்டது.  இதற்கிடையில் மழை குறுக்கிட்டதால் மண் அள்ளும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது பெய்த மழையில் ஏரியில் ஓரளவுக்கு நீர்வரத்து உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாததால் மீண்டும் ராட்சத பொக்லைன்  இயந்திரங்கள் மூலம் மண் அள்ளும் பணி தொடங்கி நடந்துவருகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறையின் விதிகளின்படி 3 அடி ஆழத்துக்கு மட்டுமே ஏரியில் மண் அள்ள வேண்டும்.

ஆனால் 10 முதல் 15அடி ஆழத்துக்கு மேல் மண் எடுக்கப்படுகிறது. தண்ணீர் இல்லாத பகுதிக்கு லாரிகள் சென்று மண் எடுத்து வரும் வகையில் செங்கல்பட்டு - திருப்போரூர் சாலையை ஒட்டி ராட்சத சுரங்கம் போன்று பாதை அமைக்கப்பட்டு,  மண் அள்ளும் பணி நடக்கிறது. மண் அள்ளும் பணி முடிந்ததும், இந்த சுரங்கங்கள் அப்படியே விடப்படும்.  இதனால் இந்த பிரமாண்ட பள்ளங்களில் விழுந்து உயிரிழப்புகள் நேரும் என கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். செம்பாக்கம் ஏரியில்  இருந்து கிணறு தோண்டப்பட்டு செம்பாக்கம், அச்சரவாக்கம் ஆகிய கிராமங்களுக்கும் திருப்போரூர் பேரூராட்சிக்கும் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. மேலும், செம்பாக்கம் ஏரியினை நம்பி செம்பாக்கம், அச்சரப்பாக்கம், மடையத்தூர், செட்டிப்பட்டு  ராமையன் குப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.  இதுபோல், விதிகளை மீறி மண் அள்ளப்படுவதால் மழைபெய்து நீரை தேக்கி வைத்து அவற்றை விவசாயத்துக்கு  பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என்றும், கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்களும், விவசாயிகளும் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, பொதுப்பணித் துறையும், மாவட்ட நிர்வாகமும் செம்பாக்கம்  ஏரியில் நேரடி ஆய்வு செய்து, ராட்சத சுரங்கம் அமைத்து சட்ட விரோதமாக மண் அள்ளுவதற்கு தடை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

செம்பாக்ம் ஊராட்சியில் கடந்த அக்.2ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில், ஏரியில் மண் எடுக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றி, கலெக்டர் பொன்னையாவிடம் கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை மாவட்ட  நிர்வாகமும், பொதுப்பணி துறையும் இதனை கண்டும் காணாமல் உள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, மக்கள் கடும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: