திருவில்லிபுத்தூர் தாசில்தார் அதிரடி சிவகாசி நகராட்சி பகுதியில் சொத்து வரி வகை மாற்றம் செய்யாமல் கூடுதல் வரிவிதிப்பு

சிவகாசி, நவ. 5: சிவகாசி நகராட்சி பகுதியில் வணிக நிறுவனங்களுக்கு வசூலிக்கும் சொத்து வரியை குடியிருப்புகளுக்கான வரி விதிப்பாக வகை மாற்றம் செய்வதில் காலதாமதப்படுத்தி வருகிறது. இதனால் வணிக நிறுவனங்களுக்கான கூடுதல் விரியை குடியிருப்புகளுக்கு செலுத்த வேண்டியுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.சிவகாசி நகராட்சி பகுதியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில் நலிவடைந்து வருகிறது. இதனால் குடோன், தொழிற்சாலை என்று இருந்த கட்டிடங்கள் பெரும்பாலும் குடியிருப்புகளாக மாறியுள்ளது. இதுகுறித்து மின் வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்து மின் இணைப்பு கட்டணங்களை பலர் மாற்றி அமைத்துள்ளனர். ஆனால் சிவகாசி நகராட்சி நிர்வாகம் இதுபோன்று குடோன்களாக இருந்து குடியிருப்புகளாக மாறியுள்ள கட்டிடங்களுக்கான சொத்துவரி விதிப்பை மாற்றாமல் உள்ளது. நகராட்சி நிர்வாகம் வீடு வாடகை குடியிருப்புகளுக்கு 6 மாதத்திற்கு 50 சதவீதம் வரி உயர்வை அறிவித்துள்ளது. இதே போல் கடை, குடோன், தொழிற்சாலைகளுக்கு சொத்து வரி 6 மாததத்திற்கு 100 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது. இதில் அதிகமானவர்களுக்கு குடியிருப்பு என்று இருப்பதற்கு பதிலாக தொழிற்சாலை, வணிக வளாகம், கடை என தவறாக சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 100 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலர் புகார் தெரிவித்தும் சொத்து வரியை குறைக்க முன்வரவில்லை. இதனால் ஏழை, எளிய பொதுமக்கள் பலர் மன வேதனையுடன் உள்ளனர். சிவகாசி நகராட்சியில் சொத்து வரியாக மாற்ற மனு கொடுத்தவர்களுக்கு நேரில் பார்வையிட்டு மின் இணைப்பு, ஆதார் அட்டை குடும்ப அட்டை அடிப்படையில் சொத்து வரியில் வகை மாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சிவகாசியை சேர்ந்த மதுபாலா கூறுகையில், நாங்கள் ஞானகிரி ரோட்டில் சொந்த வீட்டில் குடியிருந்து வருகிறோம். எங்கள் வீட்டிற்கு தொழிற்சாலைகளுக்கான 100 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்திடம் சான்றுகளுடன் சொத்து வரி வகையை மாற்றக்கோரி மனுகொடுத்துள்ளோம். ஆனால் நகரட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகராட்சி அதிகாரிகள் நேரில் எங்கள் வீட்டை பார்வையிட்டு சொத்து வரி இனத்தை மாற்றித்தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  

Related Stories: