அரசு கட்டிடங்களுக்காக பாதுகாத்து வருகிறோம் இலவச வீட்டு மனைகளுக்காக பொது இடத்தை பிரித்து வழங்கக்கூடாது குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிழுமத்தூர் மக்கள் வலியுறுத்தல்

பெரம்பலூர், நவ. 5: அரசு கட்டிடங்களுக்காக பொது இடத்தை பாதுகாத்து வருகிறோம். இலவச வீட்டுமனைகளுக்காக பிரித்து கொடுத்து விடாதீர்கள் என்று பெரம்பலூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கிழுமத்தூர் கிராம மக்கள் மனு அளித்தனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சாந்தா தலைமை வகி்த்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.குன்னம் தாலுகா வேப்பூர் ஒன்றியம் கிழுமத்தூரை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர். அதில் கிழுமத்தூர் ஊராட்சியில் அரசு மாதிரிப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு அருகே உள்ள பொது இடத்தை எங்கள் ஊராட்சி பொதுமக்களும் சுற்றுவட்டார கிராம பொதுமக்களும் பயன்பெறும் வகையில் அரசு கட்டிடங்களான கால்நடை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கட்டுப்பாட்டில் உள்ள நெல் கொள்முதல் நிலையம் போன்றவற்றை அமைத்து கொள்ள பாதுகாத்து வைத்துள்ளோம்.

அந்த இடத்தில் அரசு குறிப்பிட்ட தரப்பினருக்காக கொடுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்துக்காக பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் பல அரசு பொது கட்டிடங்களுக்கும், விளையாட்டு மைதானத்துக்கும் இடம் இல்லாமல் போய்விடும். எங்கள் கிராமம் மிகவும் பின்தங்கிய கிராமமாக உள்ளது. இங்கிருந்து மருத்துவ வசதிக்காக 10 கிலோ மீட்டர் சென்று தான் வைத்தியம் பார்க்க வேண்டும். அதேபோல் கால்நடைகளுக்கும் 7 கிமீ தூரம் ஓட்டி சென்று தான் வைத்தியம் பார்த்து வர வேண்டும். இங்கு கால்நடை மருத்துவமனை விரைவில் கட்டப்படவுள்ளது. அதோடு ஊரை சுற்றி நஞ்சை நிலங்களே அதிகம் உள்ளதால் பொது கட்டிடங்களை கட்டுவதற்கு வேறு இடங்கள் கிடைக்கவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு கிடைக்கவுள்ள அரசு கட்டிடங்களுக்காக இங்கு இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: