மரம் வெட்டுவது குறித்து புகாரளிக்க ஆன்லைன் வசதி

மதுரை, நவ. 5: மரங்களை வெட்டுவது தொடர்பான புகாரளிக்க ஆன்லைன் வசதி ஏற்படுத்துவது குறித்து, கலெக்டர் அறிக்கையளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை செல்லூரைச் சேர்ந்த குபேந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மாநில நெடுஞ்சாலை எண் 100ல் மதுரை காளவாசல் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக காளவாசல் சந்திப்பு முதல் குரு தியேட்டர் சந்திப்பு வரை பழமையான அரசமரம், பூவரசம், நெட்டிலிங்க மரம் உள்ளிட்ட மரங்கள் வெட்டப்படுகின்றன. 138 மரங்கள் வெட்ட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், சுமார் 200க்கும் மேற்பட்ட மரங்கள் இதுவரை வெட்டப்பட்டுள்ளன. பழமையான மரங்களை வெட்டாமல் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை.

நலத் திட்டங்களுக்காக மரங்கள் வெட்டுவதை தவிர்த்து, வேறு பகுதியில் நட்டால் சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம். எனவே, நலத்திட்டங்களுக்காக மரங்களை வெட்டுவது தொடர்பாக விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்கவும், மரங்களை வேரோடு அகற்றி, வேறு இடத்தில் நடும் நவீன இயந்திரங்களை பயன்படுத்தவும், மரங்களை வெட்டும் போது மரத்தைச் சார்ந்து வாழும் பறவைகள் மற்றும்  உயிரினங்களின் நலன்களை பாதுகாக்கவும், விதிகளை மீறும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக 1:10 என்ற விகிதத்தில் மரக்கன்றுகளை நடவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி பிறப்பித்த உத்தரவு: மரங்களை பாதிப்பின்றி ஐகோர்ட் கிளை வளாகத்தில் நடுவது சம்பந்தமாக மதுரை கலெக்டரும், பதிவாளர் (நிர்வாகம்) ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெட்டப்பட்டது எத்தனை மரங்கள் என்பது குறித்து மனுதாரர் மற்றும் அரசுத் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்ய வேண்டும். மரங்கள் வெட்டப்படுவது தொடர்பான புகார்களை தெரிவிக்க முதல்கட்டமாக மதுரை மாவட்டத்தில் ஆன்லைன் புகார் தெரிவிக்கும் வசதியை ஏற்படுத்துவது தொடர்பாக கலெக்டர் தரப்பில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை நவ.26க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: