4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் 7வது நாளாக தொடர் வேலைநிறுத்த போராட்டம்

தஞ்சை, நவ. 1: நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தொடர்ந்து 7வது நாளாக நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் பணியிடங்களை உயர்த்த வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பினர் மாநில அளவில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை கடந்த 25ம் தேதி துவங்கினர். இதன்படி தஞ்சை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஏராளமான மருத்துவர்கள் தொடர்ந்து 7வது நாளாக நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்டனர். தர்ணாவின்போது பயிற்சி மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும், கருப்பு துணிகளை வாயில் கட்டி கொண்டும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அரசு மருத்துவர்களின் போராட்டத்துக்கு தஞ்சை எம்எல்ஏ நீலமேகம், திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.நீலமேகம் உள்ளிட்ட கட்சியினரும் நேரில் மருத்துவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

Related Stories: