பிடிஓவுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

திருச்சி, அக்.31: துறையூர், புத்தனாம்பட்டி கிராமத்தில் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம் நேற்று நடந்தது. முகாமில் தலைமை வகித்த திருச்சி கலெக்டர் சிவராசு, 795 பயனாளிகளுக்கு ரூ.75 லட்சத்து 33 ஆயிரத்து 925 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: மக்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். டெங்கு கொசு ஒழிப்புப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளின் சுற்றுப்புறங்களில் தேங்காய் மட்டை, பழைய டயர், பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் பை, தேங்காய் ஓடு போன்றவற்றை சேராமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நவம்பர், டிசம்பர் மாதங்கள் மழைக்காலமாக இருப்பதால் ஒவ்வொரு கிராம மக்களும் டெங்கு கொசு ஒழிப்பதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். ஆழ்துளை கிணறு அமைத்து மூடப்படாமல் இருந்தால் அருகிலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்கலாம். மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் 6 ஆண்டுக்கு முன்பே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மூடப்படாமல் இருந்ததால் சிறுவன் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்தது. எனவே பொதுமக்கள் உபயோகம் இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூடவேண்டும்’ என்றார்.

198 மனுக்கள் பெறப்பட்டு, 134 மனுக்கள் ஏற்கப்பட்டு, 14 மனுக்கள் விசாரணையில் உள்ளது. நேற்று மட்டும் 97 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். முசிறி சப்கலெக்டர் பத்மஜா, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் எஸ்தர்சீலா, கலெக்டர் பிஏ சாந்தி (வேளாண்), சமூக பாதுகாப்புத்திட்ட துணை கலெக்டர் பழனிதேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் புவனேஸ்வரி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் (பொ) விமலா, தாசில்தார் சத்யநாராயணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: