காஞ்சிபுரம் நகராட்சி 13வது வார்டில் மழைநீர் கால்வாய்களை திமுக எம்எல்ஏ ஆய்வு: உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு

காஞ்சிபுரம், அக்.31: காஞ்சிபுரம் நகராட்சி 13வது வார்டில் உள்ள மழைநீர் கால்வாயை பார்வையிட்ட காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், உடனடியாக அதனை தூர்வாரி சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

காஞ்சிபுரம் நகராட்சி 13வது வார்டு கைலாசநாதர் கோயில் தெரு, மேட்டுத்தெரு, புத்தேரி தெரு உள்பட பல பகுதிகள் அடங்கியுள்ளன. இந்த பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்து விடுகிறது.இதனால், பலத்த மழை பெய்யும்போது இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகும் வாய்ப்பு உள்ளது. இதனால், கால்வாய்களை தூர்வாரி நடவடிக்கை எடுக்கும்படி காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசனிடம், அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதை தொடர்ந்து மேற்கண்ட வார்டில் உள்ள கைலாசநாதர் கோயில் தெரு, மேட்டுத்தெரு, புத்தேரி தெரு முடிவு வரை சென்று எம்எல்ஏ ஆய்வு நடத்தினார். அப்போது, மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு, பிளாஸ்டிக் பாட்டில்கள், கேரி பேக்குகளால் அடைப்பு, சில இடங்களில் கோரைப்புல் வளர்ந்து மழைநீர் தேங்கியது தெரிந்தது.இதையடுத்து, உடனடியாக கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. மழைநீர் கால்வாயை பார்வையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட எம்எல்ஏவுக்கு அப்பகுதி மக்கள், நன்றி தெரிவித்தனர். ஆய்வின்போது காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு ) மகேந்திரன், சுகாதார ஆய்வாளர் குமார், திமுக வட்ட நிர்வாகிகள் முருகன், சேகர், ரமேஷ், வெங்கடேசன் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: