திருமங்கலம் நகைக்கடையில் தீவிபத்து

திருமங்கலம், அக். 27: திருமங்கலம் நகைகடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் சேதமடைந்தன. திருமங்கலம் ஜவகர்நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (60). இவர் உசிலம்பட்டி ரோட்டில் நகைகடை வைத்துள்ளார். தற்போது தீபாவளி நேரம் என்பதால் கடையில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் வந்து சென்றனர். இந்தநிலையில் நேற்று மாலை 6 மணியளவில் கடையில் மின்கசிவினால் திடீரென தீப்பிடித்தது. இதனால் கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். கடையின் உள்புறபகுதியில் பிடித்த தீமளமளவென பரவவே கடையிலிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் சேதமடைந்தன.

திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி தீயணைப்பு படையினர் வந்து சுமார் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். உசிலம்பட்டி ரோடு திருமங்கலம் நகரின் வர்த்தக பகுதியாகும். நேற்று மாலை முதல் இந்த பகுதியில் அதிகளவில் பொதுமக்கள் தீபாவளி இறுதிகட்ட ஷாப்பிங்கை செய்தநிலையில் அந்த பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தியது. நகைகடையில் தீபிடித்ததால் உசிலை ரோட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அதே நேரத்தில் தீயணைப்பு படையினர் உரிய நேரத்தில் தீயை அணைத்து கட்டுப்படுத்தியதால் அருகேயுள்ள கடைகள் தப்பின. திருமங்கலம் டவுன் எஸ்ஐ இளங்கோ தலைமையிலான போலீசார் நகைகடையின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

இதே கடையில் கடந்த ஆண்டும் தீவிபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: