சென்னிமலையில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் உடன்பாடு

சென்னிமலை, அக்.25: சென்னிமலையில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு வரும் மூன்று ஆண்டு கால போனஸ் மற்றும் கூலி உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.சென்னிமலை பகுதியில் ஆயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு போடப்பட்ட தீபாவளி போனஸ் மற்றும் கூலி உயர்வு குறித்த மூன்று ஆண்டு கால ஒப்பந்தம் கடந்த ஆண்டுடன் காலாவதி ஆனது. இதைத்தொடர்ந்து, இந்தாண்டுக்கான போனஸ் மற்றும் கூலி உயர்வு கேட்டு அனைத்து கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள் சார்பில் சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தில் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். அந்த மனுவில், போனஸ் தொகையாக 25 சதவீதமும், கூலி உயர்வாக அடிப்படை சம்பளத்தில் இருந்து 30 சதவீதமும் வழங்க கோரியிருந்தனர்.

இது குறித்து நேற்று நடந்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் தொகையாக 2019 முதல் 2021ம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் தலா போனஸ் 8.33 சதவீதமும், கூலி உயர்வாக ஒவ்வொரு ஆண்டும் தலா ஆறு சதவீதம் உயர்த்தி வழங்குவது என்றும் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர். வேலை நிறுத்தம் செய்யாமல் மூன்று கட்ட பேச்சு வார்த்தையிலேயே உடன்பாடு ஏற்பட்டதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: