கிராம முன்னேற்ற பயிற்சி முகாம்

மேலூர், அக்.23: கொட்டாம்பட்டி இளைஞர்கள் இயக்கம் சார்பில் கிராம முன்னேற்ற பயிற்சி முகாம் 2 நாட்கள் கம்பூர் ஊராட்சி அலங்கம்பட்டியில் நடைபெற்றது. இதில் கம்பூர் ஊராட்சி பற்றிய ஆவணப்படம் வெளியீடு செய்யப்பட்டது.

கொட்டாம்பட்டி பகுதிகளில் பல்வேறு பொதுப்பணிகளை குழுவாக இணைந்து கிராம முன்னேற்றம் அடைவது எப்படி என்பது தொடர்பாக இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அலங்கம்பட்டி நாட்டாமை அடைக்கன், ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் சத்தியமூர்த்தி, மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை ஹக்கீம், பாண்டியராஜன், அலங்கம்பட்டி காத்தான் பங்கு பெற்றனர்.முதல் நாள் பயிற்சி முகாமில் ஊராட்சி சார்ந்த சட்டங்கள், பணியாளர்களின் கடமைகள், ஊராட்சி அலுவலகத்தில் கையாளப்படும் ஆவணங்கள், கணக்குகள் மற்றும் மத்திய,மாநில அரசு திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.

மேலும் கிராம சபையின் முக்கியத்துவம், இணைய தளம் மூலம் ஊராட்சி வரவு செலவு கணக்குகளை கண்காணிப்பது குறித்தும் விளக்கப்பட்டது. தமிழகத்தின் முன் மாதிரியான ஊராட்சிகளாக விளங்கும் ஓடந்துறை, குத்தம்பாக்கம் ஆகியவற்றின் வெற்றி கதைகள் குறித்து காணொளியும் காண்பிக்கப்பட்டது. இரண்டாவது நாள் முகாமில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை சார்பில் தயாரிக்கப்பட்ட ‘இளைஞர்கள் வளர்த்தெடுத்த கம்பூர் ஊராட்சி கிராமசபை’ என்னும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இம் முகாமினை கொட்டாம்பட்டி வட்டார ஊராட்சி இளைஞர்கள் இயக்கம் நடத்தியது. முகாமில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Related Stories: