பயிர் இழப்பீடு தொகையை விவசாயிகள் அனுமதியில்லாமல் கடனுக்கு வரவு வைக்க எதிர்ப்பு

சிவகங்கை, அக். 18: பயிர் இழப்பீடு தொகையை விவசாயிகள் அனுமதியில்லாமல் வங்கி கடனுக்கு வரவு வைக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சண்முகம் வேலை அறிக்கை சமர்பித்து பேசினார். கூட்டத்தில் அகில இந்திய பொதுச்செயலாளர் ஹண்ணன்முல்லா, இணைச் செயலாளர் விகிருஷ்ணன்,  துணைத் தலைவர் வரதராஜன், மாநிலத் துணைத் தலைவர் முத்துராம், மாநில பொருளாளர் பெருமாள் ஆகியோர் பேசினர். உள்நாட்டு விவசாயத்தை பெருமளவு நாசப்படுத்தும் பிராந்திய பொருளாதர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நவ.4அன்று மத்திய பிஜேபி அரசு கையெழுத்திட உள்ளது. இதன் மூலம் ஆசிய பிராந்தியத்தில் உள்ள 44 நாடுகள் உற்பத்தி செய்யும் பொருட்டுகளை வரியின்றி இறக்குமதி செய்து கொள்ள வழிவகை செய்கிறது. வேளாண்மை விளைபொருட்கள் வெளிநாடுகளிலிருந்து தாரளமாக இறக்குமதி செய்யப்பட்டு இந்திய வேளாண் சந்தை கபளீகரம் செய்யப்படும். ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை எதிர்த்து நவ.4ல் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

காவிரி, வைகை, குண்டாறு, வைப்பாறு இணைப்புத் திட்டத்தால் சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 10லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். இத்திட்டத்தை போதுமான நிதி ஒதுக்கி விரைந்து செயல்படுத்த வேண்டும்.

 2018-19க்கான பயிர் இழப்பீடு தொகை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தொகையை விவசாயிகள் அனுமதியில்லாமால் வங்கி கடனுக்கு வரவு வைப்பதை தடுக்க வேண்டும்.

நெல் குவிண்டாஸ் ஒன்றுக்கு ரூ.2ஆயிரத்து 500 வழங்க வேண்டும். நேரடி கொள்முதல் நிலையங்களில் கடந்த ஆண்டு நடைபெற்ற முறைகேடு, லஞ்சம் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: