திருப்பூரில் அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்

திருப்பூர், அக். 17: திருப்பூர்  நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அரசுத்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக புகார் எழுந்துள்ளது. திருப்பூர் மாநகர் மற்றும்  புறநகர் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள்,  ஆயிரக்கணக்கான பஞ்சாலை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. செங்கல் சூளை,  தேங்காய் அரவை ஆலை, அரிசி அரவை ஆலை, ஹோட்டல், பேக்கரி,  தங்கும் விடுதி, தனியார் மருத்துவமனை என ஆயிரக்கணக்கான நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. பின்னலாடை நிறுவனங்களில் ஆடைகளை  பேக் செய்வது, ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு இடம்மாற்றி வைப்பது,  டெய்லர்களுக்கு எடுபிடி வேலை, அரசி அரவை ஆலைகளில் உள்ள  கலத்தில் கொட்டப்படும் நெல் மூட்டைகளை பரப்பி காய வைப்பது, செங்கல்  சூளைகளில் காய்ந்த செங்கல்களை மாற்றி வைப்பது உள்பட பல்வேறு வேலைகளுக்கு  குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக வடமாநில  தொழிலாளர்கள் குடும்பத்துடன் திருப்பூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். இக்குடும்ப  உறுப்பினர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு வேலைக்கு செல்கின்றனர். வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள்  பள்ளிக்கு செல்வதில்லை. மாறாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், பஞ்சாலை உள்பட பல்வேறு  தொழில் நிறுவனங்களில், தொழிலாளர் பற்றாக்குறையால் அவதிப்படும் நிலையில், 14 வயதிற்கு உட்பட்ட வடமாநில குழந்தை தொழிலாளர்கள் நிறைய பேரை வேலைக்கு அமர்த்தும் நிலை தொடர்கிறது.  இது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய சமூக நலத்துறை, சைல்டு-லைன் மற்றும் தொழிலாளர்  நலத்துறை அதிகாரிகள் மவுனம் சாதிக்கின்றனர். புகார் மனுக்களின் அடிப்படையில் மட்டும், தொழில் நிறுவனங்களுக்கு சென்று  ஆய்வு நடத்தும் சைல்டு லைன் அதிகாரிகள், பொத்தாம் பொதுவாக நேரில் சென்று ஆய்வு செய்வதில்லை. இதனால், நாளுக்கு நாள் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிப்பது தொழிலாளர் நலத்துறையின் கடமை. ஆனால், அவர்களும் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுப்பதில்லை. தற்போதைய நிலையில் திருப்பூர் நகரில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தால், குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்படும்.

Related Stories: